நாகையில் திருமணம் ஆன மறுநாளே கடத்தப்பட்ட காதல் கணவனை மீட்டுத் தரக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்ற இளம் பெண்ணும், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

அப்போது, ஊரில் வேலையில்லாம் சுற்றித் திரிந்துகொண்டு இருந்த செல்வகுமார், வேலை விசயமாக மலேசியாவிற்குச் சென்று கடந்த சில வருடங்களாக வேலை பார்த்து விட்டு, கடந்த 16 ஆம் தேதி ஊர் திரும்பி உள்ளார்.

செல்வகுமார் ஊர் திரும்பிய அன்றே, தன் காதல் விசயம் பற்றி தன் பெற்றோரிடம் கூறி உள்ளார். ஆனால், செல்வகுமாரின் பெற்றோர் காதலுக்கு கடம் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தன் நண்பர்களிடம் ஆலோசனை நடத்திய செல்வகுமார், மறுநாளே அதாவது 17 ஆம் தேதியே, தனது காதலி சுமதியை, அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

மகனின் காதல் திருமணம் விசயம் எப்படியோ, செல்வகுமாரின் பெற்றோருக்கு, அன்றே தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், கடுமையாகக் கொந்தளித்தனர். 

மேலும், செல்வகுமார் - சுமதி காதல் திருமண விசயம், அந்த ஊரின் பஞ்சாயத்திற்கு அன்றே சொல்லப்பட்டது. இதனால், அடுத்த நாளான 18 ஆம் தேதி, வேதாரண்யத்தில் வைத்து செல்வகுமார் - சுமதிக்கு ஊர்மக்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் நடத்தி வைப்பது என்று, பஞ்சாயத்து சார்பாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 18 ஆம் தேதி காலை, ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்துகொள்ள வந்த செல்வகுமாரை, அவருடைய உறவினர்கள் கண் இமைக்கும் நேரத்திற்குள் கடத்திச் சென்று உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த காதல் மனைவி சுமதி, வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து உடனடியாக புகார் அளித்தார். அத்துடன், தன் காதல் கணவனை உடனே மீட்டுத் தாருங்கள் என்றும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஆனால், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சுமதி, தனது உறவினர்களைத் திரட்டிக்கொண்டு, வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு, சுமதி உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், சுமதியிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, காதல் கணவன் செல்வகுமாரை மீட்டுத் தருவதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, சுமதி போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றார். 

இதனிடையே, திருமணம் ஆன மறுநாளே கடத்தப்பட்ட காதல் கணவனை மீட்டுத் தரக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.