கட்டிய தாலியை காவல் நிலையத்திலேயே பெண் வீட்டார் வீசி எறிந்த நிலையில், காதல் மனைவியும் அவரது பெற்றோருடன் சென்று விட்டதால், காதல் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழ வீதி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த சிவ நந்தினி என்ற இளம் பெண்ணை காதலித்து உள்ளார். 

இப்படியாக, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் கடந்த 3 ஆண்டுகளாக வளர்த்திருக்கிறது. இப்படியாக, இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், இந்த காதல் விசயம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனால், பெண் வீட்டில் இருந்து காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக, காதலர்கள் இருவரும் ஊரை விட்டு வெளியூருக்குச் சென்று அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டி, அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

அதே நேரத்தில், “எங்களது மகளை காணவில்லை” என்று, பெண் வீட்டார் கடந்த 11 ஆம் தேதி அன்று வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தேடி வந்தனர்.

இந்த நேரத்தில், போலீசார் தங்களை தேடி வருவதை தெரிந்துகொண்ட அந்த காதல் ஜோடி, “போலீசார் தங்களை தேடி வருவதற்கு முன்பே, தாங்களே சென்று விவரத்தைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து, கடந்த 19 ஆம் தேதி அன்று வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும் வந்திருக்கிறார்கள்.

அதன்படி, காவல் நிலையத்தில் தங்களுக்குள் நடந்த காதல் திருமணம் பற்றியும் காதலர்கள் இருவரும் போலீசாரிடம் கூறி இருக்கிறார்கள். அத்துடன், திருமணம் ஆனதற்கான புகைப்பட ஆதாரங்களையும் அவர்கள் போலீசாரிடம் காட்டி உள்ளனர்.

இதனையடுத்து, பெண் வீட்டாரை அங்கு வரவழைத்த போலீசார், பேச முயன்று உள்ளனர். ஆனால், காவல் நிலையம் வந்த பெண் வீட்டார், அங்கு வைத்தே காதலன் அரவிந்த் குமாரை மிக கடுமையாக மிரட்டியதோடு, அவர் கட்டிய தாலியையும் கழற்றி வீசி உள்ளனர். 

மேலும், “இந்த திருமணம் செல்லாது” என்று, கூறிவிட், பெண் வீட்டார் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று உள்ளனர். ஆனால், போலீசார் அப்போது ஒன்றும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத காதலன் அரவிந்தகுமார், கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பெரும் சோகத்துடன் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அதே நேரத்தில், தனது காதல் மனைவியை போலீசாரின் துணையுடன் பெண் வீட்டார் பிரிந்துச் சென்ற சோகத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காதலன் அரவிந்த், தற்போது திடீரென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அரவிந்தின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, வேளாங்கண்ணி காவல் நிலைய வாசலில் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தாலியை கழற்றி வீசும் காட்சிகளும், அரவிந்த் குமார் - சிவநந்தினி  கோயிலில் திருமணம் செய்ய போது எடுத்த புகைப்படங்கள், மற்றும் காதலன் அரவிந்த், தனது காதலிக்கு ரத்தத்தால் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.