“சங்கத் தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், திராவிடக் களஞ்சியம் எனப் பெயரிட நினைத்தால், கடும் போராட்டங்களை திமுக அரசு எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்” என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“பெருமைமிக்கத் தொல் தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத்திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “தமிழர்களை திராவிடர்கள் என்பது, தமிழ் நாட்டைத் திராவிட நாடு என்பது, தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்பது, தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள் என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்பது, தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக் கட்டிடக்கலை என்பது, தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்பது, தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல் வெட்டுக்கள் என்பது, தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப் பண்பாடெனத் திரிப்பது என தமிழர்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரீகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின் மீது திராவிட முத்திரை குத்தியது போதாதென்று, தற்போது, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான வரலாற்று பெருஞ்சான்றுகளாகவும், யாராலும் மறுக்கமுடியாத தரவுகள் நிறைந்த ஆவணங்களாகவுமுள்ள தமிழ் நூல்களைத் ‘திராவிடக்களஞ்சியம்’ எனும் பெயரில் அடையாள மாற்றம் செய்ய முயல்வது திராவிடத் திருட்டுத்தனத்தின் உச்சமாகும்” என்றும், அவர் வன்மையாக கண்டித்து உள்ளார். 

“இந்நாடு தமிழ்நாடு; இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள்; மொழி தமிழ் மொழி; அதில் எழுதப்பட்டவை யாவும் தமிழ் இலக்கியங்கள்; அந்த நூல்களைத் தொகுக்கின்ற போது மட்டும் எப்படித் திராவிடக் களஞ்சியமாக மாறும்? எனும் கேள்விக்கு எவரிடமும் விடையில்லை” என்றும், சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று அடைமொழிகளைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு எனப்பேசி வாக்குகளைப் பெற்று வென்று, ஆட்சியதிகாரத்தை அடைந்த பிறகு, திராவிட இனம், திராவிடக் களஞ்சியம், திராவிடச் சிறுத்தை என்று பேசுவது திட்டமிட்ட தமிழர் அடையாள அழிப்பு வேலையாகும்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

இப்போது திராவிடம், திராவிடர் என்று பேசுவோர், தேர்தலுக்கு முன் வாக்கு கேட்டு செல்லும் போதோ, தங்கள் கட்சி மாநாடுகளுக்கு அழைக்கும்போதோ, திராவிடர்கள் என்று ஒருபோதும் கூறுவதில்லையே ஏன்? திராவிட இனம் கூறிவிட்டு நாட்டின் பெயரை மட்டும் திராவிட நாடு என்று மாற்றாமல் ஏன் தமிழ்நாடு என்று மாற்றினீர்கள்?” என்றும், சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

குறிப்பாக, “தமிழர்கள் இன உணர்ச்சியை அடையவிடாது தடுத்துக்கெடுத்ததில் திராவிட மறைப்புகளுக்கு முதன்மைப்பங்குண்டு என்றும், தமிழ், தமிழர், தமிழர் நாடு என உச்சரிக்கத்தவறி, அடையாளத்தைத் தொலைத்து, இன உணர்வை இழந்ததால், இனப்படுகொலையையே சகித்துக்கொள்ளும் அளவுக்குப் பேரிழப்பில் தமிழர்களைக் கொண்டுபோய் நிறுத்தியது” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.

இதனால், “ஆளும் திமுக அரசு தனது தமிழர் அடையாள அழிப்பு முயற்சியைக் கைவிட்டு, தமிழ் நூல்களின் தொகுப்பிற்கு, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே பெயர் சூட்டவேண்டு என்று வலியுறுத்துகிறேன் என்றும், அதனைச் செய்யத்தவறி, தமிழர்களின் உணர்வுகளை அலட்சியம் செய்யும்பட்சத்தில், மிகக்கடுமையான போராட்டங்களை அரசு எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்” என்றும், சீமான் மிக கடுமையாக எச்சரிக்கை விடுத்து உள்ளார்.