திருப்புவனம் அருகே, கால்வாயில் விழுந்த காரில் சிக்கி உயிருக்கு போரடிய 5 பேரை , துணிச்சலுடன் காப்பாற்றிய இளைஞர் முத்துகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், ஆற்றிலிருந்து மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது .

இதனால் மதுரை - ராமேஸ்வரம் இடையேயான நான்கு வழி சாலையோரமாக உள்ள மாரநாடு கால்வாயில் வெள்ளம் பாய்கிறது . இந்நிலையில் மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை நோக்கி இன்னோவா கார் ஒன்று, நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.  

லாடனேந்தல் அருகே உள்ள இந்த மாரநாடு கால்வாயில் முழு அளவு தண்ணீர் சென்று  கொண்டிருந்த சமயத்தில், நிலை தடுமாறிய அந்த கார் கால்வாயில் இறங்கியது. அந்த நேரம் அதே வழியாக திருப்புவனம், வடகரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் (29), தனது ஓனரின் உறவினர்களை அழைத்துக்கொண்டு காரில் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தார். 

M1

அப்போது இன்னோவா கார், தண்ணீரில் மூழ்கியதைக் கண்டு தன் உயிரை துச்சமென நினைத்து முத்துகிருஷ்ணன் கால்வாயில் இறங்கினார்.  பின்னர் காருடன் தண்ணீரில் தத்தளித்த 3 பெரியவர்கள், 2 குழந்தைகளையும், முத்துகிருஷ்ணன் காப்பாற்றினார். இந்த செயல் பலரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. இதனால் முத்துகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து முத்துகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், ‘ஓனரின் உறவினர்களை அழைத்துக்கொண்டு, காரில் ராமநாதபுரம் வரைக்கும்  சென்று கொண்டிருந்தேன். அப்போது மாரநாடு கால்வாய் அருகே வந்த இன்னோவா கார் பின்பக்கம் சேன்று கொண்டிருந்தது. வண்டியை நிறுத்தி பார்க்கும் போது தான் கால்வாய்க்குள் இன்னோவா கார் விழுந்தது தெரியவந்தது. 

m2

காரில் 2 குழந்தைகள் ஒரு பெண், அவரது கணவர், ஒரு முதியவர் என மொத்தம் 5 நபர்கள் இருந்தனர். இதனால் தண்ணீரில் குதித்து அனைவரையும் காப்பாற்றினேன். அதற்குள் ஓனரின் உறவினர்கள், மற்ற கார்களை நிறுத்தி உதவிக்கு பலரையும் அழைத்து வந்தனர். 

அவர்களில் காரில் வந்த ஒருவர், காப்பாற்றிய 5 பேரையும் மானாமதுரையில் கொண்டுபோய் விடுவதாக சொன்னதும், அவர்களுடன் 5 பேரையும் நாங்கள் அனுப்பி வைத்துவிட்டோம். தற்போது அவர்கள், எனது செல்ஃபோன் எண்களை கண்டறிந்து, என்னிடம் தொடர்பு கொண்டு உருக்கமாக பேசி நன்றி தெரிவித்தனர். மேலும் அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்’ என நம்மிடம் தெரிவித்தார். உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய முத்துகிருஷ்ணன் அளித்த சிறப்பு வீடியோ பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.