என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் 3 மணி நேரத்தில் எழுதி விடைத்தாளை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

online exams

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு வருகிற 1-ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.

இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டு இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

* மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும். அதிலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 * தேர்வுக்கான வினாத்தாள், பாடப்பிரிவு ஆகியவற்றை சரிபார்த்த பின்பு தேர்வை எழுத தொடங்க வேண்டும். தேர்வை கருப்பு மற்றும் நீல நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்.

* மாணவர்களின் பதிவு எண், பாடப்பிரிவு தவறாக குறிப்பிடப்பட்டு விடைத்தாள் அனுப்பப்பட்டு இருந்தால் அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும்.

* ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த தேர்வு 3 மணி நேரம் நடக்க உள்ளது. ஆன்லைன் என்று கூறப்பட்டாலும் தேர்வு பேனா மற்றும் காகிதத்தால் வீட்டில் இருந்து எழுதி அனுப்ப வேண்டும். அதன்பின்பு விடைத்தாளை பதிவேற்ற வேண்டும்

* மாணவர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கும், எழுதிய விடைத்தாளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதற்கும் மடிக்கணினி, கம்ப்யூட்டர், செல்போன், டேப்லட் ஆகியவற்றை இணையதள வசதியுடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோல் தேர்வுக்கு தேவையான ஏ4 தாள், பேனா பென்சில், ரப்பர், ஸ்கேல் போன்றவற்றையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்

* மாணவர்கள் ஏ4 தாளில் 15 பேப்பருக்கு மிகாமல் அதாவது 30 பக்கத்தில் தேர்வை எழுதி அதை தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் பி.டி.எப். ஆக பதிவேற்றம் செய்வதோடு, கல்லூரி நிர்வாகத்துக்கும் விடைத்தாளை நூலால் கட்டி, விரைவு தபால் அல்லது பதிவு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பி வைக்கவேண்டும். கல்லூரி நிர்வாகத்துக்கு நேரடியாக வந்து விடைத்தாளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

* தேர்வர்கள் முறைகேடாக தேர்வு எழுதுவதை தவிர்க்கும் விதமாக, அவர்களுடைய கையெழுத்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தால் சரிபார்க்கப்படும். அவை பொருந்தாமல் இருந்தால் அது முறைகேடான தேர்வாக கருதப்படும்.

* காலை நடைபெறும் தேர்வுக்கு 9 மணி முதல் 9.30 மணி வரை கல்லூரியிலிருந்து வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கும். எழுதிய விடைத்தாளை 12.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பிற்பகல் தேர்வுக்கு 2 மணியிலிருந்து 2.30 மணிக்குள் கல்லூரியிலிருந்து வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை எழுதலாம். 5.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள் விடைத்தாளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.