இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீயாய் பரவி வரும் நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுப்பு கேட்டு மாநிலங்களவை தலைவருக்கு எம்.பி. அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருக்கிறார்.

கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்தே அதிகம் வெளியில் செல்லாமல் மிகவும் கவனமாக இருந்து வருகிறார் அன்புமணி. தவிர்க்க முடியாத முக்கியமான அரசியல் சந்திப்புகளுக்காகச் சென்று வரும் அவர், அந்த பயணத்திலும் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். தற்போது, மழைக்கால கூட்டததொடரில் பங்கேற்பதிலிருந்து விடுப்பு கேட்டிருக்கிறார். இந்த சூழலில், அவருடைய விடுப்பு கடிதம், அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உடல் நலக் காரணங்களால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், தமிழகத்தைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் உள்பட 13 மாநிலங்களவை எம்.பி.க்கள் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுப்பு கேட்டு கடிதங்கள் அனுப்பியதாகவும், அதனை ஏற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அன்புமணி ராமதாஸூக்கு மட்டுமன்றி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் (காங்கிரஸ்), பரிமள் நத்வானி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), ஹிஷே லாசுங்பா (சிக்கிம் ஜனநாயக முன்னணி), சுஷில் குமார் குப்தா (ஆம் ஆத்மி), மானஸ் ரஞ்சன் புனியா (திரிணமூல் காங்கிரஸ்), பண்டா பிரகாஷ், லக்ஷ்மிகாந்த ராவ், பண்டா பிரகாஷ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி), மகேந்திர பிரசாத் (ஐக்கிய ஜனதாதளம்), கேஜி கென்யி (நாகா மக்கள் முன்னணி) ஆகியோருக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரு அவை உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுப்பு கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில் பாமக இளைஞரணித் தலைவர், எம்.பி அன்புமணி ராமதாசுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு அன்புமணி ராமதாஸ், இணையவழி கூட்டங்களில் மட்டுமே பங்கெடுத்து வருகின்றார். சமீபத்தில்கூட, இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், அப்படி அவர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நன்மை ஏற்படும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு என்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் இணையவழிக் கல்வி ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மாறி வரும் சூழலில் உயர் கல்வியில் அடுத்த தலைமுறைக்கான கல்வி முறையைக் கட்டமைப்பது குறித்து 2021 பிப்ரவரியில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மன்றத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கருத்தரங்கில் உலக அளவிலான துணைவேந்தர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் 250 பேர் தங்களது ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துப் பேசவிருக்கிறார்கள். இது தொடர்பாக, தமிழக துணை வேந்தர்கள், மற்றும் பன்னாட்டுக் கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் காணொலி வழி ஆலோசனைக் கூட்டங்கள் உலகத் தழிழ் வம்சாவளி அமைப்பால் வாராவாரம் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 6 கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு ஏழாவது ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

காணொலி வழியே நடந்த இந்த நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் ஜெ.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் இணைப்புரை வழங்கினார். நிகழ்வில், பப்புவா நியூ கினியா அமைச்சர் சசிந்திரன் முத்துவேல், இலங்கை எம்.பி.யும், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவன் மற்றும் கனடாவைச் சேர்ந்த ராஜ் பேட்டர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.