கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தையை, கள்ளக் காதலன் சொன்னதைக் கேட்டு, பெற்ற தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பொள்ளாச்சி பகுதியில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆனைமலை தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சரோஜினி என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு, தற்போது 3 வயதில் நிவன்யாஶ்ரீ என்ற பெண் குழந்தையும் இருந்தார்.

இந்த நிலையில் தான், கடந்த 14 ஆம் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி, குழந்தையின் தாயார் சரோஜினி, வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். 

அந்த அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர், “குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக” கூறியிருக்கிறார்.

அத்துடன், குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவமனை சார்பில் அங்குள்ள ஆனைமலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், குழந்தையின் தாயார் சரோஜினியிடம் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், இது குறித்து அவரது கணவன் மணிகண்டனிடம் விசாரித்து உள்ளனர்.

மேலும், மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இது குறித்து, குழந்தையின் தாயான சரோஜினியிடம் போலீசார் விசாரித்த போது, அவர் குழந்தையைக் கழுத்து நெறித்து கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்து உள்ளார். 

குறிப்பாக, “தனக்கும் தன் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருவதால், தனது அம்மா வசிக்கும் சேத்துமடை அண்ணா நகரில் உள்ள வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறியிருக்கிறார்.

“அப்போது, 3 வயது குழந்தையின் தாயான சரோஜினிக்கு, சர்கார்பதி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த 23 வயதான பொம்மன் என்ற இளைஞனுடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கணவன் மணிகண்டன் தினமும் கூலி வேலைக்கு செல்லும் பொழுது, கள்ளக் காதலன் பொம்மன் உடன் அவர் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.

அப்போது, வீட்டில் இருந்த 3 வயதான சிறுமி அவர்களது கள்ளக் காதலுக்கும், உல்லாச இன்பத்திற்கும்  இடைஞ்சலாக இருந்திருக்கிறார்.

இதனால், ஆத்திரப்பட்ட காதலன், 3 வயது குழந்தை நிவ்யாஸ்ரீயை கொலை செய்ய தனது கள்ளக் காதலியிடம் கூறியிருக்கிறான். 

அதன் படி, தனது கள்ளக் காதலனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, கடந்த 14 ஆம் தேதி தான் பெற்றெடுத்த 3 வயது குழந்தையை, கழுத்து நெரிந்து அவர் கொலை செய்ததும், தெரிய வந்தது. 

இதையடுத்து, பெற்ற மகளை கொலை செய்த தாயையும், தலைமறைவாக இருந்த பொம்மனை, சேத்து மடை பேருந்து நிறுத்தத்தில் வைத்து போலீசார் விரட்டி பிடித்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றம் முன்பு நிறுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் 
ஏற்படுத்தி உள்ளது.