நாமக்கல் அருகே மாடு மேய்க்கச் சென்ற 2 குழந்தைகளின் தாய் ஒருவர், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில், நிர்வாண நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலி நாடு ஊராட்சியில் உள்ள கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த நடேசன் - தீபா தம்பதிக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 7 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளன.

கணவர் அந்த பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தில், விவசாயம் செய்து வரும் நிலையில், 25 வயதான தீபா தங்களுக்குச் சொந்தமான ஆடு மற்றும் மாடுகளை அந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மேய்க்கச் செல்வது வழக்கம்.

கடந்த பல ஆண்டுகளாகவே வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கீரைக்காடு காட்டுப்பகுதியில் தீவா தனக்குச் சொந்தமான ஆடு, மாடுகளை 
மேய்த்து வந்துள்ளார்.

அதன்படி, நேற்றும் கீரைக்காடு காட்டுப்பகுதிக்கு ஆடு மாடுகளைத் தீபா மேய்க்கச் சென்றுள்ளார். அத்துடன், அந்த பகுதியில் உள்ள ஆற்றில் வீட்டில் இருந்த அழுக்கு துணிகளையும் துவைத்து விட்டு வருவதாகக் கூறி சென்று உள்ளார்.  

காலையில் ஆடு மாடு மேய்க்கச் சென்ற தீபா, மாலை வரை அவர் வீடு திரும்ப வில்லை. இதனால், சந்தேகம் அடைந்த தீபாவின் கணவர் நடேசன், மனைவியைத் தேடி, அந்த பகுதியில் உள்ள தனது உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று உள்ளார். அங்கேயும் தீபா வரவில்லை. இதனால், அந்த கிராமம் முழுவதும் தன் மனைவியை, அவர் தேடி உள்ளார். எங்குத் தேடியும் தீபா கிடைக்காத நிலையில், தன் உறவினர்களுடன் சேர்ந்து ஊர் முழுக்க தேடி உள்ளார். இதற்குள் இரவு 10 மணிக்கு மேல் ஆனதால், அவர் வீடு திரும்பி விட்டார்.

இதனையடுத்து, இன்று காலை தன் உறவினர்களுடன் சேர்ந்து, தீபாக எப்போதும் ஆடு மாடு மேய்க்கும் கீரைக்காடு காட்டுப் பகுதியில் சென்று தேடிப் பார்த்துள்ளார்.

அந்த கீரைக்காடு காட்டுப் பகுதியில் தீபா, நிர்வாண நிலையில் உயிரிழந்து சடலம் கிடந்துள்ளார். இதனைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், அருகில் சென்று பார்த்தபோது, தீபாவின் உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்துள்ளன. குறிப்பாக, தீபாவின் வாயில் துணி வைத்துத் திணிக்கப்பட்டு இருந்தது. 

மேலும், அவரின் ஆடைகள் பல இடங்களில் கிழிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த கணவர் நடேசன், கதறி அழுதுள்ளார். அத்துடன், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், தீபாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்தது வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

“ஆடு மாடு மேய்க்கச் சென்ற தீபாவை யாராவது மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம்” என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, “தீபாவை பாலியல் பலாத்காரம் செய்யும் போது, அவர் சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களைக் கூப்பிடாமல் இருப்பதற்காக, தீபாவின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டதாகவும், அதன் பிறகே திபா பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம்” என்றும், முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

“தீபாவை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, இது குறித்து அவர் வெளியே சொன்னால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதால், தீபாவை அந்த மர்ம நபர்கள் அடித்தே கொன்றிருக்கலாம்” என்றும், போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, எதையும் முழுமையாக சொல்ல முடியும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாடு மேய்க்கச் சென்ற 2 குழந்தைகளின் தாய், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில், நிர்வாண நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.