திருச்சி அருகே 3 சகோதரிகளும் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த அவரது அண்ணனும், தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து உள்ள திருவாசி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் - நீலாவதி தம்பதியினர், தினசரி கூலி வேலை செய்து வந்தனர்.

பன்னீர் செல்வத்திற்கு 60 வயதாகும் நிலையில், நீலாவதிக்கு 50 வயது நடந்துகொண்டிருந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஆனாலும், வயதான தம்பதிகள் இருவரும் மிகவும் சிரமப்பட்டே தங்களது பெண் பிள்ளைகளை வளர்த்து வந்தனர்.

இதில், மூத்த மகன் பால்ராஜ் சென்னையில் தங்கி எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஊர் திரும்பிய அவர், தன் பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பால்ராஜின் 3 தங்கைகளில் முதல் தங்கையான மீராவும், 2 வது தங்கையான கல்பனாவும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் எதுவும் சொல்லாமல், தாங்கள் காதலித்துவனடே வீட்டை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனால், அந்த வீட்டில் மூத்த பிள்ளை பால்ராஜ் மற்றும் அவரது பெற்றோருக்குப் பெரிதும் அவமானமாகப் போனது. 

ஆனாலும், அந்த பழைய விசயங்களை எல்லாம் மறந்து, அவர்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பால்ராஜின் கடைசி தங்கையான மீனாவும், முசிறியைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இதனால், அந்த இளைஞருடன் மீனா மணிக்கண்ணகில் சொல்போனில் பேசி வந்துள்ளார்.

தங்கை மீனாவின் காதல் கதை அண்ணன் பால்ராஜ் கவனத்திற்கு வந்தது. இதனால், தங்கை மீனாவை அழைத்து அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கிறார். ஆனாலும், அண்ணனின் அறிவுரையை ஏற்காமல், மீனாவும் தன் காதலித்த இளைஞனோடு வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அண்ணன் பால்ராஜ், மற்ற 2 தங்கைகளும் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன நிலையில், ஒட்டுமொத்த பாசத்தையும் கடைசி தங்கை மீனா மீது வைத்திருந்தும், அவருக்கு அறிவுரை சொல்லியும், அதை எதையும் கேட்காமல் குடும்பத்தையும் பார்க்காமல் வீட்டை விட்டு ஓடிப்போனதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

வீட்டில் உள்ள 3 சகோதரிகளும் அடுத்தடுத்து காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன மன விரக்தியில், துடித்த அவர் குடும்ப மானம் போய்விட்டதை எண்ணி மனம் நொந்துபோய் அவர் வீட்டின் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

வீட்டின் மூத்த மகன் பால்ராஜின் தற்கொலையால், அவரது மொத்த குடும்பமும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியது. இதனால், மகனைப் பிரிந்து வாழ முடியாத அவரது தாயார் நீலாவதியும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.