சென்னையை தவிர 14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் ஆண்டின் அதிக மழைப்பொழிவை பெறும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டியது. 

இதனால் தமிழகத்தில் இயல்பை தாண்டிய மழை பதிவானது. இதற்கிடையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை சற்று குறைந்து, பனித்தாக்கம் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.

chennai rain todayஇந்நிலையில் சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்தது.  இதன்பின்னர் நாள் முழுவதும் கனமழை பெய்தது.  இதேபோல் பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது.

பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையில் 4 முக்கிய சுரங்கபாதைகள் இன்று  மூடப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி துரைசாமி சுரங்கப்பாதை , ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை , மேட்லி சுரங்கப்பாதை , ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புத்தாண்டு தினமான நாளை (சனிக்கிழமை) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

chennai rain todayநாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஜனவரி 2 அன்று கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 

குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு வருகிற 3 ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் உள்பட 14 மாவட்டங்களில் இன்று மித அளவிலான மழை தொடர வாய்ப்பு உள்ளது.  இவற்றில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய கூடும். 
இதேபோன்று, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.