“கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மிக கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை தற்போது தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. 

இலங்கையில் தற்போது, அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்து போனதால், இறக்குமதி மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாகவே, இலங்கையில் அத்தியாவசியப் அடிப்படை பொருட்களுக்கு மிக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் கிடுகிடுவென ஒரே அடியாக உயர்ந்து இருக்கிறது.

இவற்றுடன், அந்நாட்டில் எரிப்பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக் கிடந்து, பல மடங்கு அளவுக்கு அதிக விலை கொடுத்து எரிப்பொருட்களை வாங்கிச் செல்லும் அவல நிலையும் உள்ளன.

மேலும், இந்த கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு நிலவி வருவதாகவுமு், இதன் காரணமாக அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அந்நாட்டு அரசிற்கு எதிராக, இலங்கை மக்கள் மிகப் பெரிய போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். 

எனினும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை செய்து வருகிறது.

இந்த சூழலில் தான், “இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குமாறு தமிழக மக்களுக்கு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அதாவது, இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிரமத்திற்கு ஆளாகி உள்ள அந்நாட்டு மக்களுக்கு, தமிழ் நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்” என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

இந்த நிலையில் தான், “இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும்” என்கிற கோரிக்கையையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது புதிய வேண்டுகோளை விடுத்து உள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், “இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் சிரமத்திற்கு மக்களுக்கு, நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“இதனால், மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ள முதல்வர், “நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றும், தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம் என்றும், மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்

- மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html
வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வங்கி கிளை : தலைமைச் செயலக கிளை, சென்னை - 600 009
சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070
IFSC குறியீடு : IOBA0001172
CMPRF பான் எண் : AAAGC0038F

- அனுப்பலாம்” என்றும், முதல்வர் கூறியுள்ளார்.

அதே போல், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் நன்கொடை வழங்குவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், தமிழக மக்கள் வழங்கும் நிதியைக் கொண்டு இலங்கை மக்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே,  “இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியமும், முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.