முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு புதிய கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என இன்றைய தினம் (டிசம்பர் 1) தெரிவித்திருக்கிறார். 
முன்னதாக, மதுரை வில்லாபுரம் பகுதியில் அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த திமுக நிர்வாகி நல்லமருதுவின் வீட்டிற்குச் சென்றார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. அங்கு தொண்டரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் . இம்மாதம் நடைபெறும் கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது முடிவை அறிவிப்பேன்" என்றார்.

கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இணைய, அழகிரி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் பலனளிக்காமல் போன நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். அண்மையில் அமித் ஷா வருகையை ஒட்டி அழகிரியின் அரசியல் பிரவேசப் பேச்சு மீண்டும் சலசலக்கப்பட்டது. அவர் ரஜினியுடன் இணைவார் என்றெல்லாம் யூகங்களின் அடிப்படையில் பேசப்பட்டது. இவை குறித்தும், தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் தகவல் குறித்தும் கேட்கப்பட்டதற்கு, ``வதந்திகளுக்கு எதுவும் பதில் கூற முடியாது. அமித்ஷாவை நான் சந்திக்க போவதாக கூறிய வதந்தி போல தான் இந்த செய்தியும்" என்று கூறினார் மு.க.அழகிரி.

இவற்றோடு சேர்த்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அழகிரியே தனிக்கட்சிப் பற்றி பேசியிருக்கிறார்.

``தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். மதுரைச் சேர்ந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர். நல்ல மருது மறைவையொட்டி அவரது இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அழகிரி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, ``புதிய கட்சி துவங்குவேனா என்பது போகப் போக தான் தெரியும். எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றார். மேலும், பாஜகவில் இணைவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு வதந்திகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது" என கூறினார். திமுகவில் துரை தயாநிதிக்கு பதவி வழங்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, ``அழைத்துப் பேசட்டும்" என்று அவர் பதிலளித்தார். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது மு.க. அழகிரி அளித்த தொலைக்காட்சி பேட்டியால் திமுக கூட்டணி அமைவதில் பின்னடைவை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து திமுக தலைமை குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் கட்சியில் அழகிரியை சேர்ப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவர் அதை மறுத்து வந்தார்.

இந்நிலையில் வரும் பேரவைத் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.