ஆரோவில் காவல்நிலையத்தில், பசுமாடும் அதன் கன்றுக்குட்டியும் காவல் நிலையத்திற்கு பஞ்சாயத்துக்கு வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் நடைபெறும் காமெடி காட்சிகள் எல்லாம் சில நேரங்களில் நிஜயத்திலும் நடப்பதுண்டு. அப்படியான ஒரு சம்பவம் தான், தற்போது புதுச்சேரி அருகே நடந்து, அனைவரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது.

அதாவது, விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான அசோக் என்பவர், தனது வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார்.

இந்த பசு மாடு கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போய் உள்ளது. அந்த பசு மாட்டை பல இடங்களில் அவர் தேடிப் பார்த்திருக்கிறார். ஆனால், எங்குத் தேடியும் பசு கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் தான், அந்த பகுதியில் உள்ள கூட்ரோட்டைச் சேர்ந்த 28 வயதான விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் பசு மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளதாக அசோக்கிற்கு தகவல் கிடைத்து உள்ளது.

இதனையடுத்து, அந்த 60 வயதான அசோக், உடனடியாக விக்னேஸ்வரனின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்து உள்ளார். அப்போது, அங்கு 10 நாட்களுக்கு முன்பு காணமால் போன தனது பசு மாடு தான் அது என்பதை உறுதி செய்துகொண்ட அசோக், “இது என்னுடைய பசு மாடு” என்று, விக்னேஸ்வரனிடம் கூறி இருக்கிறார்.

ஆனாலும், அந்த விக்னேஸ்வரம் அந்த மாட்டை அசோக்கிடம் தராமல், சண்டை போட்டு உள்ளார்.

பின்னர், அவர் இல்லாத நேரமாக பார்த்து அசோக் தனது பசு மட்டை மட்டும் அங்கிருந்து தனது வீட்டிற்கு ஓட்டிச் சென்று உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஸ்வரன், அசோக் வீட்டிற்குச் சென்று “மாட்டை ஏன் ஓட்டி வந்துள்ளீர்கள்?” என்று, கேட்டு, அவர் சண்டை போடவே, அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இது தொடர்பான புகார் அங்குள்ள ஆரோவில் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், போலீசார் இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, அந்த போலீசாரின் பஞ்சாயத்தில் இருதரப்பினரும் விட்டுக் கொடுக்காமல், “மாடு எங்களுடையது” என்று, இருவரும் வாதம் செய்து உள்ளனர்.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார், மாடு யாருடையது என்பதை விசாரித்து முடிவு செய்ய திட்டமிட்டு” போலீசார், “பசு மாடு தங்களுடையது என்பதற்கான ஆதாரத்தை எடுத்து வருமாறு” கூறி, இரு தரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர்.

அதன்படி, “இந்த பிரச்னை முடிவுக்கு வரும் வரை அந்த பசுவையும், அதன் கன்றையும் பிரிக்க வேண்டாம். இரண்டையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து கட்டும்படி” இருவரிடமும் போலீசார் கண்டிப்புடன் கூறி உள்ளனர்.

அதன்படியே,  அசோக், விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் உள்ள பசுவையும், கன்றையும் ஓட்டி வந்து ஆரோவில் உள்ள காவல் நிலையத்தில் கட்டி உள்ளனர். 

இதனால், மூன்று நாட்களாக பசுவுக்கும், கன்றுக்கும் வைக்கோல் போட்டு போலீசார் பராமரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.