தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துடன் இரண்டாம் கட்ட ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற சலசலப்பு அமைச்சர்களால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கையில் இன்று அதிகாலை தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அதிமுகவுக்குள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. 2021 இன் தமிழக முதல்வர், அம்மாவின் அரசியல் வாரிசு ஐயா ஓபிஎஸ் என்று தேனி, கம்பம், போடி, பெரியகுளம் பகுதிகளில் இன்று காலை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த போஸ்டர்கள் தேனியில் ஒட்டப்பட்ட தகவல் கிடைத்தவுடன் உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என அக்கட்சியில் அமைச்சர்கள் முதல் கட்சி தொண்டர்கள் வரை பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, செங்கோட்டையன், சி.வி சண்முகம் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்ற மூத்த அமைச்சர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்வர் பழனிசாமியை சந்தித்து சுமார் அரை மணி நேரம் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு சில அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில், துணை முதல்வருடன் ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே தகவல் கிடைத்ததும் ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டச் செயலாளரான சையதுகானை தொடர்புகொண்டு உடனடியாக அந்த போஸ்டர்களை கிழிக்கச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அவர்களும் போஸ்டர்களை கிழித்துக் கொண்டுள்ளனர்.

அடுத்த முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்தான் என போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. அடுத்தடுத்து முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.