“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு விளைவுகளை சந்திக்கக் கூடும்” என்று, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு, திமுக தொண்டர்கள் கொதித்தெழுந்து அவரது உருவ பொம்மையை எரிக்கும்போது எதிர்பாரத விதமாக திமுக தொண்டர் ரஜினிகாந்திற்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதாவது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்த போது, “திமுக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அதிமுக மீது சுமத்தி வருகிறது என்றும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை குறிப்பிட்டு திமுக கொள்ளையடித்த கட்சி” என்றும், தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, திமுக எம்.பி ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக, “2 ஜி வழக்கு குறித்து அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் கோட்டையில் வைத்து என்னுடன் விவாதிக்க தயாரா?” என்று, சவால் விடுத்தார்.

இதற்கு, பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “2 ஜி வழக்கு குறித்து முதலமைச்சர் ஏன் பேச வேண்டும்? , நானே பேச வருகிறேன்” என்று, பதில் அளித்தார்.

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்திற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பின் உச்சமாக, ராஜேந்திர பாலாஜின் உருவ பொம்மையை திமுகவினர் எரிக்க முயன்றனர். 

அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று, எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு மீண்டும் பதில் அளிக்கும் விதமாகப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “முதலமைச்சரை குறை கூற ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை” என்று, குறிப்பிட்டார். 

“மக்கள் பிரச்சனைகளுக்காக அனைத்து மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் செய்கிறார். மக்களை பற்றி சிந்திக்கக் கூடியவர் முதலமைச்சர்.  அப்படிப்பட்ட முதல்வரை யார் விமர்சித்தாலும் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று, கூறினார்.

முக்கியமாக, “திமுகவிற்கு சகுனம் சரியில்லை. தன்னை விளம்பரப்படுத்த 350 கோடி வரை ஸ்டாலின் செலவிட்டுள்ளார். தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலின் ஏமாளி ஆகப் போகிறார். திமுக தமிழக மக்களுக்காக எதையும் செய்ததில்லை. 2 ஜி ஊழல் செய்த ஆ. ராசா, திகார் சிறையில் இருந்தார். அனைவருக்கும் மரியாதை அளிப்பவன் நான். எங்களது தலைவரை மரியாதையாக பேசினால் நாங்களும் மரியாதையாக நடந்து கொள்வோம். மாறாக, நீங்கள் தரக்குறைவாக பேசினால், திமுக ஸ்டாலின், ராசா ஆகியோர் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு விளைவுகளை சந்திக்கக் கூடும்” என்றும், மிக கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

குறிப்பாக, இவரது பேட்டி தமிழகத்தின் பெரும்பாலன ஊடங்களில் “பீப் சவுண்ட்” போடப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அந்த அளவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எல்லை மீறி பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், கொதித்தெழுந்த திமுக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்படி, விருது நகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக இளைஞரணியினர், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரிக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டபோது, திமுக தொண்டர் ரஜினிகாந்த் என்பவருக்கு அவரது கால்களில் தீப்பற்றி எரிந்தது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது, இதனையடுத்து, அவர் படுகாயங்களுடன், உயிர் தப்பினார். அதன் தொடர்ச்சியாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை தரக்குறைவாகப் பேசிய ஆ.ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.