“ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ் நாட்டையே காணவில்லை என்றும், அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டு வருகிறது” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. 

அப்போது, அதிமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சருமான அன்பழகன் எழுந்து, “ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக” பகிரங்கமாகக்  குற்றம் சாட்டினார். 

அத்துடன், “விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், மீண்டும் அதே பெயரில் செயல்பட வேண்டும்” என்றும்? அன்பழகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 

இதற்குப் பதிலளித்துப் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ஜெயலலிதா பல்கலைக்கழகமானது, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்” என்று உறுதிப்படத் தெரிவித்தார். 

அத்துடன், “திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பெயர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கலை கல்லூரி என பெயர் மாற்றப்படும்” என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதனையடுத்து பேரவையில் இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படவில்லை என்பதற்கு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகமே உதாரணம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கியிருந்தால், அம்மா உணவகம் தொடர்ந்து இருக்குமோ?” என்றும், முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். 

இதனையடுத்தே, ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில், தமிழக அரசு மீது குற்றம் சாட்டி ,சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளி நடப்பு செய்தனர். 

அதன் தொடர்ச்சியாகவே பள்ளிக் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. 

அப்போது, அவையில் எழுந்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை” என்று, குறிப்பிட்டுப் பேசினார்.

“அப்படி, அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது” என்றும், அதிமுகவை மிக கடுமையாக அவர் விமர்சனம் செய்தார்.

ஏற்கனவே, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “ஜெயலலிதா ஆரோக்கியமாக இருந்த வரை தமிழ்நாட்டின் நிதி நிலைமையும் நன்றாகத் தான் இருந்தது என்றும், அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு நிதி நிலை சரிவடையத் தொடங்கியது” என்றும், குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதனை, அப்போது அன்பில் மகேஷும் வழி மொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இப்படியாக, இன்றைய தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களை, திமுக உறுப்பினர்கள் விமர்சித்துப் பேசியது, இணையத்தில் வைரலாக தொடங்கி உள்ளது.