இறுதி ஊர்வலத்தில் மேளம் வாசிக்கும் இளைஞர் ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கும்பகோணம் அடுத்து உள்ள திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் என்ற இளைஞர், இறுதி ஊர்வலத்தில் மேளம் வாசிக்கும் பணி செய்து வருகிறார்.

இவர், குத்தாலம் அருகே உள்ள தனது சக ஊழியரின் வீட்டுக்கு வந்து சென்று உள்ளார். அப்போது, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுமியுடன், ஆகாஷிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இதனால், அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் தங்களது செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிகிறது.

மேலும், இந்த பழக்கத்தில், ஆசை வார்த்தைகளைக் கூறிய ஆகாஷ், அந்த 15 வயது பள்ளி சிறுமியைத் தனது காதல் வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த சிறுமியிடம் மேலும் சில ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்த சிறுமியைத் தனியாக வரவழைத்து அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளார். இதனால், அந்த சிறுமி பயந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது, சிறுமியை சமாதானம் செய்ய, ஆகாஷ் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, சிறுமி கருவுற்ற நிலையில், சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமி தன்னுடைய காதல் கல்யாணம் குறித்துப் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அந்த நபர், திடீரென்று தலைமறைவானார். 

அதே நேரத்தில், கருவுற்ற அந்த சிறுமி அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு, தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

இது குறித்து தகவலானது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அந்த அதிகாரி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனால், 15 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.