2021ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். 


மாநிலங்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக குடியரசுத் தலைவரின் உரையை  புறக்கணித்துள்ளனர். இந்த புறக்கணிப்பு நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசுகிறார் விருதுநகர் மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி மாணிக்கம் தாக்கூர்.


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளுமன்றத்தில் மற்றொரு விவாதத்தை எதிர்கட்சிகள் தொடங்கியிருக்கலாமே..? ஜனாதிபதி உரையை புறக்கணிக்க என்ன காரணம்..?


வேளாண் சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்பது தான் எங்களது பிரதான காரணம். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதியை மூன்று முறை எதிர்க்கட்சிகள் சந்தித்துப் பேசினர். ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று இரண்டு அவையும் கூடிய பொழுது எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றம் தொடங்கிய 15 நிமிடத்தில் வெளிநடப்பு செய்தோம். 


எதிர்க்கட்சிகளோட அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?


அடுத்தக்கட்ட முடிவை எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி எடுப்பார்கள்.


டெல்லியில் நடைபெற்ற வன்முறையை தூண்டிவிட்டது ராகுல்காந்தி தான், அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளாரே?


அவருக்கு விவசாயிகள் பற்றியும் தெரியாது. விவசாய சட்டங்கள் குறித்தும் எதுவும் தெரியாது. அவருக்கு பொய் மட்டும் தான் சொல்ல தெரியும். 90 நாட்களாக குளிரில் போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளின் கஷ்டம் அவர்களுக்கு புரியவில்லை. 


ராகுல்காந்தி கேட்பது ஒன்றுதான், செங்கோட்டை சென்றவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? டெல்லி காவல்துறை அனுமதியில்லாமல் அவர்கள் சென்று இருக்க முடியாது. காவல்துறை அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்போது வன்முறைக்கு காரணமான அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் அல்லவா?


செங்கோட்டையில் விவசாய கொடி ஏற்றப்பட்டது தேசிய கொடி அவமதிப்பாக அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்களே.. உங்கள் கருத்து என்ன?


குடியரசு தினத்தன்று நடந்த பேரணியின் போது விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் பிஜேபியுடன் தொடர்பில் உள்ள, விவசாயிகள் என்ற போர்வையில் இருப்பவர்கள் தான் செங்கோட்டைக்கு சென்றார்கள். உண்மையான விவசாயிகள் யாரும் செங்கோட்டைக்கு செல்லவில்லை. உண்மையான விவசாயிகள் யாரும் தேசியக் கொடியை அவமதிக்க மாட்டார்கள். காரணம் நிறைய விவசாய குடும்பத்தில் இருந்து தான் ராணுவத்துக்கு வருவார்கள். பேரணியை வன்முறையாக மற்ற சதி நடந்து இருக்கிறது. உண்மையான தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.