வங்கியில் கேசியராக பணிபுரியும் தன் கணவன், வங்கியின் பெண் வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று, மனைவியே புகார் அளித்த வழக்கில், 7 மாதங்களுக்குப் பிறகு வங்கி அதிகாரி எட்வின் ஜெயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்த எட்வின் ஜெயகுமார் என்பவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, சில மாதங்களாகவே தனது மனைவியுடன் சரியாகப் பேசாமல், இல்வாழ்க்கையில் துளியும் நாட்டம் இல்லாதவர் போல் இருந்து உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் தனி அறை ஒன்றில் அமர்ந்து, 15 செல்போன்களை பயன்படுத்தி, வாட்ஸ்ஆப் மூலம் மாறி மாறி பல பெண்களிடம் ஆபாசமாகப் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். 

“கணவர் எந்நேரமும் அந்த குறிப்பிட்ட அறைக்குள்ளேயே இருக்கிறார். அதுவும் கதவையும் பூட்டிக்கொண்டு அப்படி என்ன செய்கிறார்? நம்மிடம் கூட ஒரு பார்த்தை கூட பேசுவது இல்லை.. அப்படி அவர் என்ன தான் செய்கிறார்?” என்று மனதிற்குள் சந்தேகமடைந்த அவரின் மனைவி, அந்த செல்போன்களை ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது, அதில் பல பெண்களுடைய ஆபாச போட்டோ, வீடியோ, உரையாடல்கள் என்று பல விசயங்கள் இருப்பதைக் கண்டு கடும் 
அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, தன் கணவனிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு உள்ளார். ஆனால், “இது பற்றி வெளியே பேசக் கூடாது” என்று, தன் மனைவியைக் கடுமையாக மிரட்டியதோடு, தன் தாயாருடன் சேர்ந்துகொண்டு மனைவியை மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், பயந்துபோன எட்வின் ஜெயகுமாரின் மனைவி, தனது தந்தையின் உதவியுடன், தஞ்சை டி.ஐ.ஜி.யிடம், ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், “வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை வாட்ஸ்ஆப் மூலம், தனது கள்ளக் காதல் வலையில் வீழ்த்தி, அதன் பிறகு அவர்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு” வந்தது தெரியவந்தது. 

அதனையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் ஜெயக்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான ஜெயக்குமார் உள்ளிட்ட அவரது பெற்றோர்களையும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதனையடுத்து, எட்வின் ஜெயகுமார், அவரது பெற்றோர், வங்கியில் எட்வின் ஜெயகுமாருக்கு உதவிய பெண் உட்பட மொத்தம் 5 பேர், போலீசார் தங்களைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்களை இணைத்து, போலீசார் தரப்பில் மதுரை உயிர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எட்வின் ஜெயகுமார், லில்லி உள்ளிட்ட 5 பேரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு, அவர்கள் 5 பேர் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இதனையடுத்து, எட்வின் ஜெயகுமார் உள்ளிட்ட 5 பேரும் தலைமறைவானார்கள். அதன் தொடர்ச்சியாக, எட்வின் ஜெயகுமாரும், அவருக்கு உதவி செய்த மற்றொரு வங்கி பெண் பணியாளரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு வல்லம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மணப்பாறை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, மணப்பாறை போலீசார் தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயகுமார் உட்பட 5 பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, மணப்பாறை பகுதியில் தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயகுமாரை, மணப்பாறை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.