சென்னை அம்பத்தூரில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலை காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மகா தேவன் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞன், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம் பெண் செல்லும் இடங்கள் எல்லாம், மகா தேவனும் பின் தொடர்ந்தே சென்றுள்ளான்.

அந்த பெண்ணை பல மாதங்கள் பின் தொடர்ந்து சென்றும், பல முறை காதலை சொல்லியும் அந்த இளம் பெண், காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திடைந்த மகா தேவன், அந்த பெண்ணை பழிவாங்கும் விதமாக, அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாகத் தெரிகிறது. மேலும், இப்படி ஆபாசமாக பதிவிட்ட புகைப்படம், பலருக்கும் பகிரப்பட்டதாகவும் தெரிகிறது.

குறிப்பாக, இளம் பெண்ணின் ஆபாசப் படத்துடன், சம்மந்தப்பட்ட பெண்ணின் தொலைபேசி எண்ணும் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இணையத்தில் இந்த ஆபாசப் படத்தையும், தொலைபேசி எண்ணையும் பார்த்த சிலர், அந்த பெண்ணுக்கு போன் தப்பாக பேசியதாகத் தெரிகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் கவனித்திற்கு கொண்டு சென்றனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குறிப்பிட்ட அந்த ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து, அந்த ஆபாசப் படத்தை பகிர்ந்தவர் மகா தேவன் என்கிற பொறியியல் பட்டதாரி இளைஞன் என்பதை கண்டுபிடித்தனர். 

அதன்படி, அவரின் வீட்டைக் கண்டுபிடித்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஒரு தலை காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து, மகா தேவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், சென்னையில் ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - உஷா தம்பதியினர் வேளச்சேரி மெயின் ரோடு அருகே தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகின்றனர். இவர்களின் தள்ளுவண்டிக் கடைக்கு அருகே உள்ள மற்றொரு உணவகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த 23 வயதான நிவேந்திரன் பணியாற்றி வந்தார்.

அப்போது, செல்வகுமாரின் கடைக்கு அவரது 16 வயது மகள் வந்து செல்வது வழக்கம். அப்போது, அந்த 16 வயது சிறுமிக்கும், நிவேந்திரனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறிய நிவேந்திரன், “நாம் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்” என்று கூறி, அந்த சிறுமியை தனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரிய வந்த நிலையில், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நிவேந்திரன் மற்றும் அந்த சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்த நிலையில், சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், சிறுமியை கடத்திச் சென்ற நிவேந்திரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.