மனைவி பிரசவத்திற்குச் சென்ற அடுத்த சில மாதங்களில் கணவன் அடுத்தடுத்து 3 பெண்களைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்காரன் என்ற இளைஞர், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

அப்போது, அதே பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த அங்குள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு உள்ளது. 

இப்படியாக, இருவரும் ஒருவரை ஒருவர் காதல் வயப்பட்ட நிலையில், இருவரும் சில காலமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆன பிறகும் இருவரும், திருப்பூரிலேயே தங்கி அதே நிறுவனத்தில் பணி புரிந்து வந்திருக்கிறார்கள்.

இவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த சில ஆண்டுகளில் முதல் குழந்தை பிறந்து உள்ளது. 

இந்த நிலையில் தான், சிங்காரத்தின் மனைவி 2 வது முறையாகக் கருவுற்று, அவர் தனது அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். 

இப்படியாக, மனைவி பிரசவத்துக்குச் சென்று சில ஆண்டுகள் ஆகியும், தனது மனைவியை அவரது கணவன் சிங்காரன் மீண்டும் அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதனால், சந்தேகமடைந்த அவரது மனைவி தானாகத் திருப்பூருக்கு வந்து தனது கணவனை பார்த்து உள்ளார்.

அப்போது, தான் பிரசவத்திற்கு சென்ற அந்த குறிப்பிட்ட இடைவெளியில் தனது கணவன் செயலை கண்டு மிரண்டு போனார்.

அதாவது, 2 வதாக பிரசவத்திற்காகத் தான் சென்றதும், அந்த நேரத்தில் கணவன் சிங்காரன் அங்குள்ள பக்கத்து நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கு பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

இதனையடுத்து, அந்த பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததால், அதன் தொடர்ச்சியாக கோவையை சேர்ந்த மற்றொரு பெண்ணையும் அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

இதனையடுத்து, மதுரையை சேர்ந்த இளம் பெண்ணையும் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். 

அதே நேரத்தில், முதல் மனைவிக்கு தெரியாமல் அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்ட சிங்காரன், தனது இரண்டு மனைவிகளையும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை தனித்தனியாக வாடக்கு வீடு எடுத்து தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

இதனைத் தெரிந்துகொண்ட சிங்காரன் முதல் மனைவி, தன் கணவனிடம் நியாயம் கேட்டிருக்கிறார். அப்போது, அவர் திமிராகப் பேசியதோடு மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, தனக்குத் தெரியாமல் அடுத்தடுத்து 3 திருமணங்கள் செய்துகொண்ட தனது கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.