தங்கையை பலாத்காரம் செய்த குற்றவாளியை, சினிமா பாணியில் சிறைக்கே சென்று அவரது சகோதரர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நமது வாழ்க்கையில் சில நேரங்களில் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அது போன்ற ஒரு சம்பவம் தான் டெல்லியில் தற்போது நடந்துள்ளது, அனைவரையும் புருவம் உயர வைத்துள்ளது.

டெல்லி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜாகீர் குடும்பமும், அந்த பகுதியில் உள்ள மெஹ்தாப் குடும்பமும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். 

ஜாகீருக்கு இளம் வயதில் ஒரு தங்கை இருந்துள்ளார். அவருக்கு 18 வயது கூட பூர்த்தியாகாமல் இருந்தது. அதே நேரத்தில், ஜாகீருக்கு 22 வயதும், மெஹ்தாப்க்கு 28 வயதும் நடைபெற்று வந்தது.

அப்போது, ஜாகீர் வீட்டிற்கு மெஹ்தாப் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். மெஹ்தாப்பை, ஜாகீர் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்துப் பழகி வந்துள்ளனர். அத்துடன், ஜாகீர் குடும்பத்தினர் மெஹ்தாப்பை கொண்டாடி வந்திருக்கின்றனர்.

இதனைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட மெஹ்தாப், ஜாகீர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது தங்கையை, 18 வயது கூட நிரம்பாத அந்த சிறுமியை, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், மன முடைந்த ஜாகீரின் தங்கை, அடுத்த சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டார். 

கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தில், மெஹ்தாப்பை டெல்லி அம்பேத்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர் மீது 376டி, 328, 363, 342, 120பி மற்றும் போக்சோ சட்ட ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், மெஹ்தாப் கைது செய்யப்பட்டு, திகார் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், குடும்பத்தாரின் நம்பிக்கையைச் சீரழிக்கும் வகையில், ஜாகீரின் தங்கையை மெஹ்தாப் பாலியல் பலாத்காரம் செய்ததால், அவரை கொலை செய்ய ஜாகீர் திட்டமிட்டு வந்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட மெஹ்தாப், திகார் சிறையில் இருந்ததால் அவரை பழி வாங்க முடியாமல் ஜாகீர் தவித்து வந்துள்ளார்.

எனினும், அவரை எப்படியும் பழி வாங்கியே தீர வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை ஜாகீர் தீட்டி வந்தார். இதனால், திட்டமிட்ட அவர் சின்ன சின்ன தவறுகளைச் செய்தார். ஆனால், அதற்காகக் கைது செய்யப்பட்ட ஜாகீர், டெல்லியில் உள்ள லோக்கல் சிறையில் மட்டுமே அடைக்கப்பட்டார். 

பின்னர், வெளியே வந்த அவர், சமீபத்தில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக திகார் சிறைக்குச் சென்றார். பின்னர், ஜாகீரின் விடுத்த வேண்டுகோளின் பேரில், சிறை எண் 8 இருந்து மெஹ்தாப் அடைக்கப்பட்டு இருக்கும் வார்டு எண் 4 இல் உள்ள தரை தளத்திற்கு அவர் மாற்றப் பட்டார். 

சிறையில் இருக்கும் வார்ட் மாற்றப்பட வேண்டும் என்பதற்காக, மற்ற கைதிகளுடன் ஜாகீர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனால் ஜாகீரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இதற்காகவே கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காத்திருந்த ஜாகீர், மெஹ்தாப் இருந்த வார்டை நோட்டமிட்டு, தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தார். 

அதன்படி, காலையில் மெஹ்தாப் எழுந்திருக்கும் நேரம், காலை உணவு, அதன் பிறகு அவரின் பணி, மதிய உணவு, இரவு உணவு, அவரின் ஓய்வு, பொழுது போக்கு என பல்வேறு நடவடிக்கையையும் ஜாகீர் நோட்டமிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருந்த ஜாகீர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையிலேயே தானே உருவாக்கிய கத்தி போன்ற ஒரு உலோகத் துண்டால், மெஹ்தாப்பை வெறித் தீர பல முறை குத்தி கொலை செய்து உள்ளார். இதனால், சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, மெஹ்தாப்பை வெறித் தீர குத்தும் போத, “உன்ன தலையில் தூக்கி வச்சி எப்படி எல்லாம் கொண்டாடினோம்?! எங்க குடும்பத்தையே சிதைச்சிட்டியேடா பாவி” என்று கூறிக்கொண்டே, ஜாகீர் கத்தி போன்ற ஒரு ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, உடன் பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி சிறையில் இருப்பதால், அவரை கொலை செய்வதற்காக ஜாகீர் வேறொரு கொலையைச் செய்து சிறைக்குச் சென்று, அங்கு தன் குடும்பத்தைச் சீரழித்தவரைப் பழி வாங்கும் விதமாகக் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சினிமாவையே மிஞ்சும் இந்த சம்பவம், டெல்லியில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.