சென்னையில் “நான் அவன் இல்லை” சினிமா பாணியில், திருமண ஆசைகாட்டி 15 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்த மோசடி மன்னன் சிக்கி உள்ளான்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராகேஷ் சர்மா, ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக கத்தார் நாட்டில் வேலை பார்த்துவிட்டு, சென்னை திரும்பி உள்ளார். கத்தார் நாட்டில் அவர் வேலை பார்க்கும் போது, பெண்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களின் செல்போன் எண்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடம் திருமணம் செய்துகொள்வதாக மயக்கும் வார்த்தைகளைப் பேசுவது வழக்கம். 

அதன்படி, பேசி மயக்கும் பெண்களிடம் ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். அங்கு, ராகேஷ் சர்மாவுக்கு பிரச்சனையாகவே, அவர் அங்கிருந்து தப்பித்து சென்னை திரும்பி உள்ளார்.

சென்னை திரும்பியதும், கத்தார் நாட்டில் செய்தது போலவே,  “நான் அவன் இல்லை” சினிமா பாணியில், மேட்ரிமோனி மூலம் திருமணமாகத இளம் பெண்களைக் குறிவைத்துள்ளார். 

அதன்படி, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்டு, திருமணம் செய்துகொள்வதாக ஆசை ஆசையாகப் பேசி மயக்கி உள்ளார். இப்படி பேசி பேசியே அந்த பெண்ணிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும், 20 சவரண் நகைகளும் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ராகேஷ் சர்மாவு, தொடர்ந்து அந்த பெண்ணிடம் பணம் கேட்கவே, அவர் மீது அந்த பெண்ணிற்குச் சந்தேகம் வந்துள்ளது. இதனால், பயந்துபோன அந்த பெண், நடந்ததை தன் தந்தையிடம் கூறி உள்ளார். இது தொடர்பாக, ராகேஷ் சர்மாவுவிடம் விளக்கம் கேட்க அந்த பெண் முயன்றுள்ளார். ஆனால், விளக்கம் எதுவும் கேட்க வேண்டாம் என்று, அவரது தந்தை கூறி உள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் நன்கு உணர்ந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், அந்த பெண் ராகேஷ் சர்மாவிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல் இயல்பாகப் பேசி வந்துள்ளார். அப்போது, ராகேஷ் சர்மாவு அந்த பெண்ணிடம் மீண்டும் 2 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். அதற்கு, “மாதவரம் ரவுண்டானா அருகே வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு” அந்த பெண் கூறி உள்ளார்.

பணம் வாங்கும் ஆசையில் ராகேஷ் சர்மாவும், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்துள்ளான். அங்கு மப்டியில் நின்றிருந்த போலீசார், ராகேஷ் சர்மாவை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதனையடுத்து, ராகேஷ் சர்மாவிடம் போலீசார் தங்களுக்கே உண்டான பாணியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை, காஞ்சிபுரம், கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 15 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியது தெரிய வந்தது. அது தொடர்பான ஆதாரங்களை போலீசார், அவனிடமிருந்து பறிமுதல் செய்தனர். அத்துடன், ஏமாற்றப்பட்ட 15 க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்பான விபரங்களையும் போலீசார் சேகரித்தனர். 

இதனையடுத்து, ராகேஷ் சர்மாவை கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.