“கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேனென்று சொன்னவ தானே நீ? அப்ப, வா” என்று, இரவில் பெண் கவுன்சிலருக்கு ஒருவர் பாலியல் அழைப்பு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் எல்லாம் தன் வாயில் வந்ததை எல்லாம் வாக்குறுதியாக அள்ளி வீசுவது வாடிக்கையான ஒன்று. ஆனால், தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்ற பின்பு, தான் அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவார்களா? என்பது கேள்விக்குறி தான்.

அப்படி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒரு பெண் கவுன்சிலர் அளித்த வாக்குறுதி தான், தற்போது அவருக்கு வினையாக வந்து விபரீதமாக மாறிப்போய் உள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் திருப்பதிச்சாரம் ஊராட்சியில் 33 வயதான திருமணம் ஆன பெண் ஒருவர், கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலராக போட்டியிட்டார். 

அந்த தேர்தல் நேரத்தில், “நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உதவ ஓடி வருவேன்” என்று, வார்த்தைக்கு வார்த்தை அவர் கூறி வாக்கு சேகரித்தார்.

அதன்படியே, அந்த 33 வயது பெண் கவுன்சிலராக வெற்றி பெற்றார். ஆனால், அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அந்த பெண் கவுன்சிலர் தன் குழந்தை உடன் தனியாக வசித்து வந்து உள்ளார். இவரது மாமனார் மற்றும் மாமியார் அந்த பகுதியில் மற்றொரு வீட்டில் வசித்து வந்தனர்.

கவுன்சிலராக வெற்றி பெற்ற பிறகு, தான் ஏற்கனவே அளித்த வாக்குறுதியான “கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்” என்று, தன் பகுதி மக்களுக்குச் சேவை ஆற்றும் மனப்பான்மையில், தன்னுடைய செல்போன் எண்ணை, அந்த பகுதி மக்களுக்குப் பலருக்கும் வழங்கி இருந்தார்.

இதனையடுத்து, அந்த பெண் கவுன்சிலர் குழந்தை உடன் தனியாக வசித்து வருவதை தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த வன்னியப் பெருமாள் என்பர், இரவு நேரங்களில் தொடர்ந்து அழைத்து தவறாகப் பேசி வந்துள்ளார். 

அதற்கு, இந்த கவுன்சிலர் ராங் நம்பர் என்று அமைதியாக இருந்துவிட்டார். ஆனால், அந்த நபர் தினமும் இரவு நேரத்தில் போன் செய்து ஆபாசமாகப் பேசுவதையே வாடிக்கையா கொண்டிருந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் கவுன்சிலர், இது தொடர்பாக விசாரித்துள்ளார்.

அப்போது, தினமும் இரவில் போன் செய்து தொந்தரவு செய்வது வன்னியப் பெருமாள் என்பதைத் தெரிய வந்தது. இதனையடுத்து, “இனி அப்படிச் செய்யாதே” என்று நேரில் அழைத்து எச்சரித்து, அவர் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், வன்னியப் பெருமாள் மீண்டும் இரவு நேரத்தில் அந்த பெண் கவுன்சிலருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக போனில் அழைத்து தொல்லை கொடுத்து உள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண் கவுன்சிலர், தனது மாமனாரிடம் இது குறித்து புகார் கூறி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரின் மாமனார் வன்னியப் பெருமாளிடம் சென்று இதைத் தட்டிக்கேட்டு உள்ளார். ஆனால், வன்னியப் பெருமாளோ அவரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த அந்த பெண் கவுன்சிலர், அங்குள்ள ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில், வன்னியப் பெருமாள் மீது புகார் அளித்தார். 

இது குறித்து வழக்கப் பதிவு செய்த போலீசார், வன்னியப் பெருமாளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், இனிமேல் இப்படி பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போலீசார் அவரை எச்சரித்து விட்டு, அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டனர். மேலும், அவரை கைது செய்வது தொடர்பாகவும் போலீசார் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.