திருப்பூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள மகாலட்சுமி நகரில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மகாலட்சுமி நகர் பகுதியில், கடந்த 2 நாள்களாக அடையாளம் தெரியாத ஒரு நபர், அந்த பகுதியில் ஊர் முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், அவரிடம் விசாரித்து உள்ளனர். ஆனால், அவர் எந்த பதிலும் சரிவர சொல்லாமல் கடந்து சென்றுள்ளார். 

இப்படி ஊர் முழுக்க சுற்றி வந்த அந்த மர்ம நபர், அந்த பகுதியில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஒரு பெண் மட்டும் தனி ஆளாக இருந்துள்ளார்.

அப்போது, அந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர், வீட்டில் தனியாகா இருந்த பெண்ணிடம், ஏதேதோ பேசி திடீரென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அந்த அடையாளம் தெரியாத நபரைப் பிடித்து, ஊருக்கு பொதுவான ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். 

அதன் தொடர்ச்சியாக, “நீ யார்? எந்த ஊர்? ஏன் இந்த ஊருக்கு வந்த? அந்த பெண் வீட்டிற்கு ஏன் போன? அந்த பெண்ணிடம் ஏன் தப்பாக நடக்க முயன்ற?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், அவரிடமிருந்து சரிவர எந்த விதப் பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அங்கு நின்ற சிலர், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பல்லடம் காவல் துறையினருக்கு ஊர் மக்கள் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், அவர் பெயர் முரளி என்பதும், அவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக கட்டட பணிக்காக பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதிக்கு அவர் வந்ததும் தெரியவந்தது. அத்துடன், “சும்மா தான் ஊர் சுற்றிப் பார்த்தேன்” என்றும், அவர் பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். 

இதனிடையே, பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு அவரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், பல்லடம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், ஈரோடு மாவட்டம் கோபி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் 72 வயதான சண்முகம் என்பவர், போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.