பொய் வழக்குப் போட்டதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர், போலீசாரை 12 மணி நேரம் கதிகலங்க வைத்து அலைக்கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

போலீசாரையே கதிகலங்க வைத்த இந்த சம்பவம் மதுரையில் தான் அரங்கேறி இருக்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மறவன் குளத்தில் உள்ள வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு கடந்த மாதம் தகவல் கிடைத்தது. 

அதன்படி, போலீசார், கடந்த மாதம் 29 ஆம் தேதி அந்த குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சிவராமன், சிவகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன், கைது செய்யப்பட்ட இடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கைது செய்யப்பட்ட சிவராமன் அளித்த வாக்கு மூலத்தின் பேரில், முக்கிய குற்றவாளியான துரைராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது “போலீசார் தன் மீது பொய் வழக்குப் போடுவதாகவும், தன்னிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து விட்டதாகவும்” கூறி துரைராஜ், வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு துரைராஜை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதனையடுத்து. அவரை மேலூர் கிளைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் அவரை சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறை வாசலுக்கு சென்ற போது, தான் தற்கொலை செய்து கொள்ள மாத்திரை சாப்பிட்டு இருப்பதாகக் கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தினார். 

அத்துடன், துரைராஜ் மயக்கம் போட்டு விழுவது போல நடித்து உள்ளார். இதனால், பதறிப்போன சிறை நிர்வாகம் அவரை ஏற்க மறுத்தது. அதன் பின்னர், மேலூர் மருத்துவமனைக்கு அவர் அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த பார்த்தபோது, அவர் கூறியது அனைத்தும் பொய் என்பதும், அவர் நடிப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கடும் ஆத்திரமடைந்த போலீசார், அவரை மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். அப்போது, மேலூர் சிறை நிர்வாகம் துரைராஜை அனுமதிக்க மறுப்பு தெரிவித்தது. 

இதனால், வேறு வழியின்றி திருமங்கலம் கிளை சிறைக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கே திடீரென சுவற்றில் முட்டிக் கொண்டு துரைராஜ், தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், பதறிப் போன சிறை நிர்வாகம், துரைராஜை சிறைக்குள் அடைக்க அங்கேயும் மறுப்புத் தெரிவித்தது. இது தான் சரியான வழி என கண்டறிந்த துரைராஜ், மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுக்கவே, சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் குழம்பித் தவித்தனர்.

இதன் காரணமாக, விடிய விடிய காத்திருந்த போலீசார், ஒரு கட்டத்திற்கு மேல் அவரை திருமங்கலம் கிளைச் சிறையில் அடைத்தனர். தற்கொலை மிரட்டல் விடுத்தால் தன்னை விட்டு விடுவார்கள் என நினைத்து மிரட்டல் விடுத்த கைதி, போலீசாரை அலைய விட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.