மதுரையில் 17 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்து உள்ள செம்புகுடிபட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதான பிரகாஷ் என்ற இளைஞர், அந்த பகுதியில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அதே நேரத்தில், இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும், அந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, அந்த சிறுமியின் மனதை மாற்றி, காதலன் பிரகாஷ் தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறுமிக்கு எந்த புரிதலும் இல்லாமல், காதலனை நம்பி அவருடன் சென்றார் என்றும் தெரிகிறது.

இதனையடுத்து, சிறுமியை தன்னுடன் அழைத்துக்கொண்ட சென்ற காதலன் பிரகாஷ், அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சிறுமியை அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் திருமணம் செய்வதாகக் கூறி, சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பிறகு, சிறுமியை அந்த வீட்டில் பூட்டி வைத்து, தொடர்ந்து பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் குற்றம்சாட்டப் படுகிறது.  

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பிச் சென்ற பிரகாஷ், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அதன் தொடர்ச்சியாக, அந்த வீட்டிலிருந்து எப்படியோ தப்பி சிறுமி, ஒரு வழியாக வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்ததும், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து, தனது அம்மாவிடம் கூறி கதறி அழுது உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தயார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, பிரகாஷின் வீட்டிற்கு சென்று உள்ளனர்.

அப்போது, பிரகாஷின் பெற்றோர், சிறுமியையும் அவரது பெற்றோரையும் மிக மோசமாக வார்த்தைகளைப் பயன்படுத்தி பயங்கரமாகத் திட்டியதாகவும், சாதியைச் சொல்லி திட்டியதாகத் கூறப்படுகிறது. இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பிரகாஷ் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், கோவை மாவட்டம் மருதமலை அடிவாரம் அருள் ஜோதி நகர் பகுதியில் கடன் கொடுத்தவர் தனது மகளைத் தவறாகப் பேசியதால் வாழைப்பழத்தில் விஷம் கலந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். கடன் தொல்லையால் ஏற்பட்ட அவமானம் காரணமாக நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.