திருவள்ளூர் மாவட்டத்தில் விவாகரத்துக்குப் பெற்றோருடன் தங்கியிருந்த இளம் பெண், திடீர் காதலால் காதலனுடன் ஓடிப்போனதால், அவரது பெற்றோர் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்டம் கோரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ஏழுமலை -  வயதான பாக்கியம் தம்பதிகள் வசித்து வந்தனர். விவசாய தொழில் செய்து வந்த இந்த தம்பதியினருக்கு 32 வயதில் அலமேலு என்ற மகளும், 29 வயதில் சந்தியா என்ற மகளும், 27 வயதில் ரோசி என்ற மகளும் என மொத்தம் 3 மகள்கள் இருந்துள்ளனர்.

இதில், விவசாயம் பார்த்துக் கஷ்டப்பட்டு 3 மகள்களையும் படிக்க வைத்த அவரது தந்தை ஏழுமலை, 3 பேரையும் முறைப்படி திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இதில், 3 மகள்களும், அவரவர் கணவருடன் வசித்து வருகின்றனர். கடைசி மகள் ரோசிக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ரோசிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. தொடக்கம் முதலே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்ற கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இதனால், ரோசி அவரது கணவரை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, நீதிமன்றம் சென்று முறைப்படி தனது கணவரை ரோசி விவாகரத்து செய்துள்ளார். அதன்படி, தனது பெற்றோர் வீட்டில் ரோசி வசித்து வந்துள்ளார்.

கடைசி மகள் செல்லமாக வளர்த்து விட்டதால், வருத்தப்பட்ட ரோசியின் பெற்றோர், அவருக்கு 2 வது திருமணம் செய்து வைக்க, தங்களது உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள பெரிய மனிதர்களிடம் சொல்லி வைத்ததாகக் கூறப்படுகிறது. அது தொடர்பாக ரோசிக்கு, அவரது பெற்றோரும் உறவினர்களும் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இருந்து வந்த ரோசிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திடீரென்று காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம், ரோசியின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த ரோசியின் பெற்றோர், தன் மகளை அழைத்துக் கண்டித்து அறிவுரை கூறி உள்ளனர். ஆனால், இதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத ரோசி, திடீரென்று தன்னுடைய காதலருடன் வீட்டை விட்டு ஓடி உள்ளார். 

மகள் காணவில்லை என்று, அவரது பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். இதனையடுத்து, தங்களது உறவினர்கள் வீடு மற்றும் ரோசியின் தோழிகளின் வீடு என எல்லா இடங்களிலும் தேடி உள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகம் அடைந்த ரோசியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், ரோசி காதலித்து வந்த அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞனும் காணாமல் போனது தெரிய வந்தது.

இதன் காரணமாக, விவாகரத்தான தன் மகள் காதலித்த இளைஞனுடன் ஓடிப் போனது தெரிய வந்தது. இதனால், அவமானமும் கடும் மன வேதனை அடைந்த ரோசியின் பெற்றோர் ஏழுமலை - பாக்கியம் தம்பதியினர், இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். 

இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், 
அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.