தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். 

இதனையடுத்து, அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, தந்தை - மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்து, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும், கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணம் தொடர்பாகத் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதனைத்தொடர்ந்து, மறுநாளே லாக்கப் டெத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்தை வணிகர் சங்கம் நடத்தியது.

இதனைத்தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும்” இரங்கல் தெரிவித்தார்.

மேலும், “கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

அத்துடன், “தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர், தலைமை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

“உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை” எடுக்கப்படும் என்றும், முதலமைச்சர் பழனிசாமி உறுதிப்படத் தெரிவித்தார்.

அத்துடன், “என் தந்தை, சகோதரர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது இரட்டை கொலைக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி” என்றும், உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி பேசியிருந்தார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்காமல், அவரது குடும்பத்தினர் தொடர்ந்து போர் கொடி தூக்கி வந்தனர். 

இதனைத்தொடர்ந்து, சிறையில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொண்டார். மாஜிஸ்திரேட் விசாரணையின் போது ஜெயராஜ் மனைவி, மகள்கள் வருகை தந்து அவர்கள் தரப்பு கேள்விகளை முன் வைத்தனர். 

அப்போது, மாஜிஸ்திரேட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை வாங்க அவர்களது உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். 

“நீதித்துறை மீது மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்குவதாக” உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி கூறினார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், இருவரும் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பென்னீக்ஸின் நண்பர் ராஸ்குமார் கூறும்போது, “20 ஆம் தேதி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறைந்தபட்சம் 7 முறை தந்தையும், மகனும் லுங்கிகளை மாற்றினார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களது ஆசனப் பகுதியில் இருந்து ரத்தம் கசிந்துகொண்டே இருந்ததால், அவர்களது உடல் ஈரமாக இருந்தது என்றும், சாத்தான் குளம் மருத்துவமனைக்கு செல்லும் போது, காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது, அவர்களது இருவரின் ஆடைகளும் கிழிந்து இருந்தது” என்றும் அவர் கூறினார்.

மேலும், “அவர்களது இருவரின் உடலிலும் ரத்தம் படிந்து இருந்தது என்றும், ஆசனப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்” என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அப்போது, அவர்கள் மாற்றிக்கொள்ள லுங்கி கொடுத்து, அவர்கள் காரில் அமரும்போது வலிக்காமல் இருக்க, அவர்கள் அமரும் இடத்தில் துணிகளைக் கீழே வைத்து, அதன் பிறகு அமர வைத்தோம்” என்றும் அவர் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

குறிப்பாக, மருத்துவ பரிசோதனையின் போது தந்தைக்கு ரத்த அழுத்தமானது 192 ஆக இருந்ததும் என்றும். மகனுக்கு 184 ஆக இருந்தது என்றும்; இதன் காரணமாக மருத்துவர்கள் அவர்களுக்கு உடல் தகுதி சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டனர்” என்றும் தெரிவித்தார்.

முக்கியமாக, “தந்தை - மகன் கைது செய்யப்பட்ட அன்று இரவு, காவல் நிலையத்தில் பென்னீக்ஸ் ரத்தம் வடிய நிர்வாணமாக இருந்ததாகவும், உள்ளே பார்க்கப் போன கிராம மக்களை போலீசார் வெளியே தள்ளி விட்டதாகவும்” அவரது நண்பர் ரவி குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், “அன்று இரவு முதல் தந்தை - மகன் இருவரும் உதவி கேட்டு அழுதுகொண்டே இருந்ததாகவும், ஆனால் மறுநாள் காலையில் தான் அவர்களை உறவினர்கள் பார்க்க முடிந்ததாகவும்” ரவி, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

இதனால், தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில், இருவருக்கும் காவல் நிலையத்திலேயே பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் தினமும் புது புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த மேலும் ஒரு விசாரணைக் கைதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.