கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 2 வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Lockdown is no solution - RahulGandhi

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், “என் கருத்துக்களை விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல், ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“நாட்டில் நடப்பது குறித்து, நான் சில நிபுணர்களிடம் பேசினேன். அந்த புரிதலின் அடிப்படையில் தான், நானும் பேசுகிறேன்” என்று விளக்கத்துடன் ராகுல் காந்தி பேசத் தொடங்கினார்.

“ஊரடங்கு என்பது ஒரு இடைக்கால நிவாரணம் போன்றது, இது கொரோனாவுக்கு ஒரு தீர்வு அல்ல” என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “இந்தியா ஒன்றுபட்டு வைரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட ராகுல்காந்தி, நாம் பழுதான கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும், நம்முடைய வளங்களைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும், அப்படிப்பட்டவற்றை மாநிலங்களுக்கும் கொடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பரிசோதனையை அளவிட்டு, அவற்றைப் புள்ளிவிவர ரீதியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனாவுக்கு எதிராகப் போராடும் ராணுவத்திற்குப் பிரதமர் மோடி அதிகாரம் அளிக்க வேண்டும்” என்றும் ராகல்காந்தி கெட்டுக்கொண்டார்.

"கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும்" என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார்.