ஜூன் 29 ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள சுமார் 200 க்கம் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகியே அச்சுறுத்தி வருகிறது. 

இந்தியாவை பொருத்தவரை, கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் இறுதியில் தான் பரவ தொடங்கியது. இதனை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல், தமிழ் நாடு உட்பட நாடு முழுவதும் வருகிற 30 ஆம் தேதி வரையும் 5 முறை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் கடந்த நிலையில், 100 நாட்களை நெருங்கி வருகிறது. இந்த 3 மாத காலமாகத் தலைநகர் சென்னையை கடுமையாகப் பாதித்து வந்த கொரோனா வைரஸ், மக்கள் அதிகமாக வாழும் இடங்களான வட சென்னை பகுதியில் மிகப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க மண்டலம் வாரியாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அதன்படி, தலைமைச் செயலாளரைத் தலைவராகக் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டதுள்ளது. 

டாஸ்க் ஃபோர்ஸ் கீழ் துறை வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரி செய்ய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலை வாய்ப்புத் தேடி சென்னை வந்தவர்கள் எல்லாம், தற்போது ஊரடங்கால் வேலை இழந்து, வருமானம் இழந்து, மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். பொது மக்கள் பலரும், உயிர் பிழைத்தால் போதும் என்று, சொந்த ஊர்களுக்குத் திரும்பி உள்ளனர். ஆனாலும், முதலமைச்சர் 

பழனிசாமி சொன்னது போல், கொரோனா தொற்று பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்று அந்த கடவுளுக்குத் தான் தெரியும்.

மேலும், ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குநர் பிரதீப் கவுர் தலைமையில், 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு முறை ஊரடங்கு நிறைவு பெறும் போதும், இந்தக் குழு தாங்கள் ஆய்வு செய்த அடிப்படையிலான முடிவுகளை முதலமைச்சர்களிடம் அளிப்பார்கள். அந்த ஆய்வுகளை வைத்து, சுகாதாரத்துறை அமைச்சர், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பது வழக்கம்.

அதன்படி, தற்போது 5 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று சற்று வேகமாகப் பரவி வருகிறது. அத்துடன்,  சென்னை தவிர வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து தமிழகம் திரும்புவோரால் கொரோனா தொற்று மாவட்டங்களில் சற்று அதிகமாகக் காணப்படுகிறது. 

அதேபோல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதலாக சோதனை மேற்கொள்வதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக உறுதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 15 ஆம் தேதி ஆலோசனை நடத்தி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதே போன்று, வரும் 29 ஆம் தேதியும், 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். 

அந்த ஆலோசனையில், ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு முடிய உள்ளதால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன. மேலும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை பரவுவதை அடுத்துத் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், ரத்த அழுத்தம் தொடர்பாக  ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் விழிப்புணர்வு பதிவை, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.