“தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்” என்றும்,  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

16 வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. 

அப்போது பேசத் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “வணக்கம்” என்று, தமிழில் பேசத் தொடங்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் இனிமையான மொழி, எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்” என்றும், அவர் தமிழ் மொழியை புகழ்ந்து பேசினார்.

“அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண் - பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றும், மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது” என்றும், குறிப்பிட்டார்.

“விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்” என்றும், அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்” என்றும், ஆளுநர் நம்பிகத் தெரிவித்தார்.

“மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு, அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்றும், அவர் திட்டவட்டமாக கூறினார்.

“இதற்காக, கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும் ரத்து செய்யவும், தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட நமது மீனவர்களின் சமூக நலன்களை இந்த அரசு பாதுகாக்கும்” என்றும், வாக்குறுதி அளித்தார்.

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள், தமிழ்நாட்டில் புத்துயிர் ஊட்டப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

குறிப்பாக, “நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமுன் வடிவு கொண்டு வந்து, குடியரசுத்தலைவரை வலியுறுத்துவோம்” என்றும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  தெரிவித்துள்ளார்.