கணவனிடமிருந்து விவகாரத்து கேட்டு வந்த பெண்ணை மயக்கி, அவரை நிர்வாணமாகப் படம் எடுத்து வக்கீல் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற சம்பவங்கள், இந்த முறை தமிழ்நாட்டில் அதுவும் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.

திருவள்ளூர் அடுத்து உள்ள மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வந்தார். அப்போது, அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் தனது கணவனிடம் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். 

இதனால், கணவனிடம் விவகாரத்து பெற வேண்டும் என்று எண்ணிய அந்த பெண், திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குச் சென்று உள்ளார். 

அப்போது, அங்கு திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள பெரியார் தெருவை சேர்ந்த 44 வயதான டார்ஜன் என்ற வழக்கறிஞர் அவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். 

அந்த வழக்கறிஞரிடம் அந்த பெண் அணுகி விவகாரத்து பெற தேவையான விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டு உள்ளார். 

பின்னர், வழக்கறிஞர் டார்ஜன், “உங்கள் விவகாரத்து வழக்கை நானே நடத்துகிறேன் என்று கூறி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அந்த பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

அதன் பிறகு, வழக்கறிஞர் டார்ஜன் அந்த பெண்ணுக்கு போன் செய்து, “நீங்கள் சில ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றும், நானே உங்கள் வீட்டுக்கு வந்து அந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்கிறேன்” என்றும், கூறியிருக்கிறார். இதனை கேட்ட அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

அதன் படி, அந்த பெண்ணின் வீட்டிற்கு வழக்கறிஞர் டார்ஜன் வந்திருக்கிறார். அப்போது, அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். 

அத்துடன், வழக்கறிஞர் டார்ஜன், தான் வாங்கி வந்த ஆப்பிள் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து, அதனை அந்த பெண்ணுக்கு குடிக்க கொடுத்திருக்கிறார்.

இதனை குடித்த அந்த பெண், அடுத்த சிறிது நேரத்திலேயே அங்கேயே மயங்கி உள்ளார். இதனையடுத்து, வழக்கறிஞர் டார்ஜன், மயங்கிக் கிடந்த அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, தன்னுடைய செல்போனில் பல்வேறு போட்டோக்களை எடுத்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணை மயக்கத்திலேயே வைத்து, அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

பின்னர், மயக்கம் தெளிந்து அந்த பெண் கண் விழித்ததும், தான் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

அதன் தொடர்சசியாக, தான் எடுத்து நிர்வாண படங்களை காட்டி, “உனது ஆபாசப் படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவேன்” என்று கூறி, அவரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.

இதனால், பயந்து போன அந்த பெண், மானத்திற்குப் பயந்து முதலில் 3 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்திருக்கிறார்.

இதனைப் பெற்றுக்கொண்ட அந்த வழக்கறிஞர், மேலும் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளார். அந்த பெண் அப்போது 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உள்ளார். ஆனால், டார்ஜன் மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். வழக்கறிஞர் டார்ஜனுக்கு ஆதரவாக அவரது மனைவியும் சேர்ந்துகொண்டு மிரட்டியிருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இது தொடர்பாக திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த தகவலைத் தெரிந்துகொண்ட வழக்கறிஞர் டார்ஜன், தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்கறிஞர் டார்ஜனை தீவிரமாகத் தேடி வந்தனர். 

இந்த நிலையில், கொடைக்கானலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் விரைந்துச் சென்று, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட  வழக்கறிஞர் டார்ஜனை திருவள்ளூருக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில்  முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.