நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கலந்துகொண்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பைத் தலைமையேற்று நடத்தியவர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி. மகேஷ்வரியின் சொந்த ஊர் திண்டுக்கல். வயோதிகம் காரணமாகவும் உடல் நலக்குறைவாலும் மகேஷ்வரியின் தந்தை நாராயணசாமி சில தினங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்ததாகத் தகவல் வந்தது.

இந்த தகவல் உடனடியாக மகேஸ்வரிக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மகேஸ்வரி சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னின்று செய்ய வேண்டிய சூழலிலிருந்தார். திடீரென இந்த தகவல் கிடைத்ததும், வேறொருவரை அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக மாற்றியமைக்க முடியாது என்பதால், தானே முன்னின்று அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார்.
 
அதன்படி, இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அவர் காவல்துறை யூனிஃபார்மில் கம்பீரத்துடன் சல்யூட் வைத்து, அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே அவர் உயரதிகாரிகளைச் சந்தித்து உடனடியாகத் திண்டுக்கல் செல்ல வேண்டியதையும் அதற்காக விடுப்பு கேட்டார். அப்போதுதான் அவரின் தந்தை நேற்றே இறந்துவிட்ட தகவல் அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது. தந்தை இறந்துவிட்டார் என்று தெரிந்திருந்தும், கடமை தவறாமல் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அங்கிருந்தவர்களிடையே வியப்பையும், பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. உடனையாக அவரையும அவருடையை குடும்பத்தினரையும் திண்டுக்கல் செல்ல காவல்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்கள். தற்போது மகேஸ்வரிக்கு ஆறுதலும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இவரது கணவர், பாலமுருகன் நெல்லை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். அவரின் ஒருமகள் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு மகள் 12-ம் வகுப்பு படிக்கிறார். கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், வைரஸ் தொற்று பாதிப்பு குறித்துக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார் பாலமுருகன். இந்நிலையில் அவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த இரு வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று தான் மீண்டும் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.