மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த விளம்பர படத் தயாரிப்பாளர் வைஜெயந்தி என்பவருக்குச் சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய சொகுசு பங்களா ஒன்று, மாமல்லபுரத்தில் இருந்துள்ளது.

அந்த கொகுசு பங்களாவின் உரிமையாளர் வைஜெயந்தி, கோபாலபுரத்தில் வசிக்கும் நிலையில், அந்த பங்களாவின் ஒரு பகுதியில் காவலாளி ராஜேந்திரன் என்பவர் தன் மனைவி மற்றும் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் அந்த பங்களாவின் பின் பக்கம் உள்ள மரத்தின் மீது ஏறி, கொள்ளையர்கள், பங்களாவிற்குள் புகுந்துள்ளனர். அங்கு, காவலாளி ராஜேந்திரனை கடுமையாகத் தாக்கி, குத்தியால் குத்தி ரத்தம் சொட்டச் சொட்ட, அவரை வீட்டிற்குள்ளேயே கட்டி வைத்துள்ளனர்.

அதன் பிறகு, காவலாளி ராஜேந்திரனின் மனைவியின் ஆடைகளை எல்லாம் தாறுமாறாக கிழித்த, அவரையும் தாக்கி உள்ளனர். அத்துடன், காவலாளி ராஜேந்திரனின் மாமனார் மற்றும் அவரது குழந்தைகளின் வாய், கை, கால் ஆகியவற்றைக் கட்டி, அங்குள்ள தனி அறையில் வைத்து அடைத்து விட்டனர்.

அதன் தொடர்ச்சியாகக் காவலாளி ராஜேந்திரன் மனைவியை அந்த கிழிந்த ஆடைகளுடன் அழைத்துச் சென்று, அந்த பங்களாவில் உள்ள ஒவ்வொரு அறையாகத் திறந்து காட்டச் சொல்லி இருக்கிறார்கள். அவரும் பயந்துபோய் ஒவ்வொரு அறையாகத் திறந்து காட்டி உள்ளார். ஆனால், அந்த அறைகளில் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படியாக, அந்த வீடு முழுவதும் தேடிய நிலையில். அங்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்ற விரக்தியில், வீட்டில் உள்ள பெரிய டி.வி.யை அடித்து உடைத்துள்ளனர்.

மேலும், காவலாளி ராஜேந்திரன் மனைவி அணிந்திருந்த ஒரு சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டனர். அத்துடன், அறையில் போட்டு அடைக்கப்பட்டிருந்த குழந்தைகள் தங்க நகைகள், காலில் அணிந்திருந்த கொலுசு மற்றும் வீட்டில் இருந்த மின்சார அடுப்பு ஆகியவற்றைக் கொள்ளையடித்துக்கொண்டு, அந்த பங்களாவின் மேல்மாடிக்குச் சென்றுள்ளனர்.

குறிப்பாக, காவலாளி ராஜேந்திரன் மனைவியின் ஆடைகள் அனைத்தும் முற்றிலும் கிழித்துத் தொங்கவிடப்பட்டிருந்ததால், அந்த பெண் மானத்திற்குப் பயந்து வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் என்று நினைத்துக்கொண்டு, அந்த கதவைப் பூட்டாமல் அப்படியே போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

அந்த நேரம் பார்த்து, அந்த வழியாகப் பால்காரர் வரும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்த நொடியே, அந்த கிழிந்து தொங்கிய ஆடைகளுடன் உயிர் பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டு “திருடன்.. திருடன்..” என்று கத்தி உள்ளார். 

இதனையடுத்து, அந்த பால்காரர் அந்த பகுதியில் இருந்தவர்களை அழைத்துக்கொண்டு, அந்த கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆராய்ந்து, அந்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, சென்னை அருகே தனியாக இருந்த சொகுசு பங்களாவில், மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை மானபங்கப்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.