“வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களைச் சுற்றி கன்டெய்னர்கள் நிற்பது ஏன்? சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பது ஏன்?” என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய வகையில் செயல்பாடுகள் நடைபெறுவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் போதிய நம்பகத்தன்மை இல்லை” என்று, வெளிப்படையாகவே பேசினார்.

அத்துடன், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு தன்னிச்சையாகவே செயலிழப்பது ஏன்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார். 

மேலும், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கன்டெய்னர் லாரிகள் வருவது, இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு லேப்டாப்புடன் சிலர் வருவது உள்ளிட்டவை மேலும் மேலும் அச்சத்தை ஏற்படுத்ர்கிறது” என்றும், அவர் பகிரங்மாக குற்றம்சாட்டி உள்ளார். 

குறிப்பாக, “வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும். ஜனநாயகத்தில் வாக்களிப்பவர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் போன்றோர் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டின் மூலமாக நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கடமை” என்றும், கமல் வலியுறுத்தினார்.

முக்கியமாக, “வாக்காளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் இருக்கிறார்கள்” என்றும், அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் வாக்குபதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லும் நிலை தான் தற்போது உள்ளது என்றும், இதனால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத்தன்மை மற்றும் திருப்திகரமாக இல்லை” என்றும், கமல்ஹாசன் மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதே போல், விருத்தாச்சலம் வாக்கு எண்ணும் மையம் அருகே நின்ற கண்டெய்னர் லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால், அங்கு திரண்ட அந்த பகுதி மக்களுடன் அந்த லாரியை திறக்கக்கோரி விருத்தாச்சலம் காங்கிரஸ் வேட்பாளர், திட்டக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கி, அங்கேயே நிறுத்தி வைத்துள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.