விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனுதர்மத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளை விமர்சித்து, சில தகவல்களை ஒரு யூடியூப் சேனலில், சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் கூறப்பட்டிருக்கும் தகவல்களில், சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, திருமா, அவரே பெண்களை விமர்சிக்கிறார் என்கின்ற ரீதியில் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பட்டு வருகின்றன.

அப்படி பரப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, ``மனுதர்மத்தை தாம் விமர்சித்துப் பேசியதை திரித்து, பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தாம் பேசியதாக பொய்யாக வக்கிர கும்பல் வதந்தி பரப்புகின்றன" என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியிருக்கும் அந்த வீடியோவில், உண்மையில் கூறப்பட்டிருப்பது, `மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்று குறிப்பிட்டிருக்கிறது' என்பதுதான்.

திருமாவளவன், மனுதர்மத்தை சொல்லப்பட்டதாக கூறியிருக்கும் கருத்தை முன்வைத்து, `திருமாவளவன் பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று பேசிவிட்டார். ஆகையால் அவரை கைது செய்ய வேண்டும்' என்று சிலர் முன்வைக்கின்றனர். அவர்களில் ஒருவராக, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், ``தி மு க வில் 90% ஹிந்துக்கள் உள்ளார்கள் என்ற @mkstalin அவர்களே, ஹிந்து பெண்கள் குறித்து @thirumaofficialன் தவறான, கொச்சையான, அவதூறு கருத்துக்களை தி மு க ஏற்றுக்கொள்கிறதா? இல்லையெனில், மத மோதல்களை தூண்டும் @thirumaofficial கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பீர்களா?" என கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் கூறிய கருத்தின் நோக்கம் சார்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், ``பெண்கள் காலம்காலமாக வன்கொடுமைக்கு ஆளாகிவருகின்றனர். இதற்கு காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படுகிற மனுதர்மம் எனும் கருத்தியல்தான் காரணம் என்பதை நமது முன்னோர்கள் பலரும் கண்டறிந்து வெளிப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக அம்பேத்கர், பெண்களை இழிவு செய்யும் மனுதர்மத்தை கொளுத்துவோம்.

தந்தை பெரியாரும் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிப்போம் என்றார். இணைய கருத்தரங்கில் பேசியது இந்த அடிப்படையில்தான். ஒரு மாதத்துக்கு முன்னர் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் மனுதர்மம் என்பது பெண்களை கொச்சைப்படுத்துகிறது என குறிப்பிட்டேன். ஆனால் அரசியல் ஆதாயம் கருதுகிற ஜாதிவெறி பிடித்த கூட்டம், மதவெறி பிடித்த கூட்டம் திட்டமிட்டு எனக்கு எதிரான பொய் பரப்புரையை மேற்கொள்கின்றனர். 

பெண்களுக்கு எதிராக நான் பேசியதைப் போன்று தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதுமுற்றிலும் பொய். பெண்களுக்காக நாங்கள் வாதாடுகிறோம். பெண்கள் மீட்சி பெற குரல் கொடுக்கிறோம். கூட்டணியில் சலசலப்புக்கு முயற்சி இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆணாதிக்க வெறிபிடித்த கூட்டம் அவதூறுகளை பரப்பி வருகிறது. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய துருப்புச் சீட்டுகளை கையில் எடுக்கின்றனர். இதற்கு ஒருபோதும் நாம் அஞ்ச தேவை இல்லை. இதற்கு எதிராக மக்களை நாம் அணிதிரட்டுவோம்" என்று கூறியிருக்கிறார் திருமாவளவன்.

விளக்கங்கள் கூறப்பட்ட போதும், பாஜக திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. 
இந்து பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசிய திருமாவளவன் மீது பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன்  புகார் அளித்துள்ளார். ``இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்த ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் யாரும் ஒரு மதத்தை குறிப்பிட்டு அவதூறுகளை பேச கூடாது. ஆனால் இந்த திருமாவளவன் எப்படி இவ்வளவு தரம் தாழ்ந்து பேச முடிகிறது? நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா என்ன செய்கிறார்?" என பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திருமாவளவனை மிக மோசமாக சித்தரித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகிவருகின்றன. இந்த ஹேஷ்டேக்கில் திருமாவளவனை பலரும் கேவலமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்  பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
``விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தியது சரியா? அவர் பேசியது மிகவும் தவறு.  கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்?  பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இதுபற்றி வாய் திறக்காதது ஏன்? 

கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதை திமுக, காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டில் உள்ளவர்களிடமே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பார்கள்?"

இவ்வாறு அவர் கூறினார்.