விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மனுதர்மம் பற்றிய பேச்சைக் கண்டித்து பாஜக சார்பில், நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள்  இன்று ஆர்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த ஆர்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தடையை மீறி ஆர்பாட்டத்துகாக சிதம்பரம் புறப்பட்ட குஷ்புவை வழியிலேயே போலீஸார் கைது செய்தனர்.

மனுதர்மத்தில் பெண்கள் பற்றி குறிப்பிட்டிருப்பதை சுட்டிக் காட்டி திருமாவளவன் பேசியதைக் கண்டித்து சில நாட்களுக்கு முன்பு, பேட்டி கொடுத்த குஷ்பு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த நிலையில்தான் தமிழகம் முழுக்க பாஜக சார்பில் திருமாவளவனை எதிர்த்து ஆர்பாட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிதம்பரத்தில் குஷ்பு, மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ஆகியோர் முன்னிலையில் ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலீஸார் நேற்று தடை விதித்த நிலையில் குஷ்புவோ, ‘நீங்கள் ஆர்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். நான் எப்படியாவது சிதம்பரம் வந்துவிடுவேன். தடையை மீறி ஆர்பாட்டம் நடத்துவோம்’ என்று மாவட்ட பாஜகவினரிடம் கூறியிருந்தார்.

இதை அறிந்த போலீஸார் குஷ்புவை இன்று அதிகாலை முதலே கண்காணித்தனர். இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வழக்கமாக, தான் பயன்படுத்தும் கார் அல்லாமல் வேறுகாரில் சிதம்பரத்தை நோக்கி ஈசிஆர் சாலையில் பயணப்பட்டார் குஷ்பு. சென்னை போலீஸார் உடனடியாக காஞ்சிபுரம் போலீஸுக்கு தகவல் கொடுக்க, மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீஸ் டீம் முட்டுக்காடு அருகே வந்துகொண்டிருந்த குஷ்புவின் வாகனத்தை மறித்து அவரைக் கைது செய்தது. அவர் வந்த காரில் இருந்து அவரை இறக்கி, போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர் போலீஸார்.

அதேபோல் செங்கல்பட்டில் வசிக்கும் பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு திண்டிவனம் தொழிற்பேட்டை டோல்கேட் அருகே செல்லும்போது கைது செய்யப்பட்டார். ராகவனை அவரது காரிலேயே அழைத்துச் சென்றனர் போலீஸார்.