வாழைப்பழத்தில் விஷம் வைத்து காதலியைக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோபிநாதபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அய்யப்பன், அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அதேபோல், கும்பகோணம் அருகே நந்திவனம் மெயின் சாலை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் 20 வயதான தமிழ், அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். 

Kumbakonam youth arrested after murdering lover with poison in banana

தமிழ் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே, அய்யப்பன் அந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது முதலே, அய்யப்பன் - தமிழ் இடையே காதல் மலர்ந்துள்ளது.

தமிழ், 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்த பிறகும், இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இருவரும் சுமார் 5 வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகத் தமிழ், தன் காதலன் அய்யப்பன் உடன் பேசாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து, அய்யப்பன் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, தமிழ் மற்றொரு நண்பருடன் சிரித்து பேசியதை நேரில் பார்த்துள்ளார்.

Kumbakonam youth arrested after murdering lover with poison in banana

இதனால், ஆத்திரமடைந்த அவர், தமிழைத் தனியாக அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு, “அந்த நபர் நண்பர் தான் என்றும், சந்தேகப்படும் படியாக ஒன்றுமில்லை” என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், இதில் சமாதானம் அடையாத அவர், காதலியை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி உள்ளார்.

அப்போது, பாதி வழியிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தான் ஏற்கனவே திட்டமிட்டபடி, “இருவரும் தற்கொலை செய்துகொள்வோமா?” என்று காதலியிடம் கேட்டுள்ளார். அவரும், சரி என்று சொல்லவே, இருவரும் விஷம் அருந்திய வாழைப்பழத்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, தான் ஏற்கனவே வீட்டிலிருந்து எலி மருந்து தடவிக் கொண்டு வந்த வாழைப்பழத்தை, காதலிக்கு ஊட்டி விட்டுள்ளான். அப்போது, “நீ வாழைப்பழம் சாப்பிடலையா?” என்று காதலி கேட்க,  “உனக்கு ஊட்டிவிட்டதும், நான் சாப்பிடுகிறேன்” என்ற பதில் அளித்துள்ளான்.

காதலி வாழைப்பழத்தைச் சாப்பிட்டதும், காதலன் பழத்தைச் சாப்பிடாமல், இருசக்கர வாகனத்தில், அவரது வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். 

Kumbakonam youth arrested after murdering lover with poison in banana

இந்நிலையில், வீட்டிற்கு வந்ததும் தமிழுக்கு மயக்கம் வந்திருக்கிறது. இது குறித்து, அவரது தந்தை ரவி கேட்டபோது, நடந்ததைக் கூறி தமிழ் அழுதிருக்கிறார். இதனால், பயந்துபோன அவரது தந்தை அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி தமிழ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலன் அய்யப்பனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, சந்தேகம் காரணமாக, வாழைப்பழத்தில் விஷம் வைத்து காதலியை, காதலனே கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.