11 ஆம் வகுப்பு மாணிவியை, கூட படிக்கும் சக பள்ளி மாணவர்கள் இருவர் சேர்ந்த கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர சம்பவம், வட இந்தியாவிலோ, இந்தியாவில் பெயர் தெரியாத வேற ஒரு இடத்திலோ நடைபெறவில்லை. மாறாக, தமிழகத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்து உள்ள பேட்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பகுதியில் செயல்பட்டு வரும் சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அப்போது, அந்த பள்ளி மாணவி மீது, கூட படிக்கும் மாணவன் ஒருவன் சபலப்பட்டு உள்ளான்.

இதனால், தன் சக நண்பன் ஒருவனுடன் சேர்ந்த அந்த மாணவியை அடைந்தே தீர வேண்டும் என்று, ரகசியமாக அந்த மாணவன் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது.  

திட்டமிட்ட படி, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அந்த மாணவன் சம்மந்தப்பட்ட அந்த மாணவியை ஊருக்கு வெளியே உள்ள ஒரு இடத்திற்கு எதையோ பேசி வரவழைத்து உள்ளனர். அப்போது, அந்த மாணவியுடன், சம்மந்தப்பட்ட மாணவன் எதையோ பேசிக்கொண்டு அப்படியே சிறுது தூரம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு நடந்து பேசிக்கொண்டே சென்றுள்ளனர்.

அங்கு, ஏற்கனவே மறைந்து இருந்த மற்றொரு மாணவன் வெளியே வரவே, அந்த இரு மாணவர்களும் சேர்ந்து அந்த மாணவியை பயங்கரமாக மிரட்டியும், அடித்தும் துன்புறுத்தி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அத்துடன், கொடூரத்தின் உச்சமாக அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வதை, அந்த இரு மாணவர்களும் சேர்ந்து தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து உள்ளனர். 

மேலும், இது குறித்து வெளியே கூறினால், இதை சமூக வலைத்தளங்களில் பரப்பி, உன்னை இன்னம் அசிங்கப்படுத்துவோம் என்றும், அந்த மாணவியை அவர்கள் இருவரும் கடுமையாக மிரட்டி, அங்கிருந்து அனுப்பி உள்ளனர்.

இதனால், பயந்துபோன அந்த சிறுமி, அழுதுகொண்டே வீடு திரும்பி உள்ளார். ஆனால், பயம் காரணமாக, அந்த மாணவி இது குறித்து தன் வீட்டில் எதையும் கூறாமல் இருந்து விட்டார்.

அந்த நேரம் பார்த்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்த மாணவர்களில் ஒருவன், தன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்து உள்ளான்.

இதனைப் பார்த்துப் பரவசப்பட்ட அந்த 9 ஆம் வகுப்பு மாணவன், அந்த வீடியோவை தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கும் வாட்ஸ்ஆப் மூலம் பரப்பி உள்ளார். இப்படியாக, அந்த மாணவியின் வீடியோ சம்மந்தப்பட்ட மாணவியின் தந்தைக்கே சென்றுள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, இது குறித்து தன் மகளிடம் வினவி உள்ளார்.

இதன் காரணமாக, அந்த மாணவியும், வேறு பழியின்றி நடந்ததை தன் தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, அங்குள்ள குருபரப் பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் 3 பேரையும் கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.