கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை நேற்றைய தினம் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். 

அப்போது கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி, செப்டம்பர் 18ந் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 28ந் தேதியும் திறக்கப்படும் என துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அடுத்தக்கட்டமாக, கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்கும் தேதியை அறிவித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக வணிகர் சங்க பேரமைப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 

``தமிழக அரசு கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கோயம்பேடு காய்கறி, பூ, பழம், மற்றும் உணவு தானிய வணிக வளாகத்தை 4 மாதங்களுக்கும் மேலாக முடக்கி வைத்திருந்தது. ஆனால், அதன் பின்னணியில் பல நிலை வணிகர்கள் பல்லாயிரக்கணக்கானோர், அதை நம்பியிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் என லட்சக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரத்தை முழுவதும் இழந்து, நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர். காய்கறி மொத்த விற்பனை கடைகள் மட்டும் திருமழிசைக்கு மாற்றப்பட்டு, அதனால் லட்சக்கனக்கான விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமல் பெரும் நட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

கோயம்பேடு வணிக வளாக கூட்டமைப்பு நிர்வாகிகள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கவனத்திற்கு இச்செய்தியினை கொண்டுவந்தனர். நிற்கதியாக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் நிலையறிந்த நமது பேரமைப்பு,தமிழக முதல்வர் கவனத்திற்கும், துணை முதல்வர் கவனத்திற்கும் இச்செய்தியினை பலமுறை எடுத்துச் சென்று, விளக்கங்கள் அளித்து, உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதன் விளைவாக தமிழக முதல்வர் ஆகஸ்ட் 24ம் தேதியும், துணை முதல்வர் 27-ம் தேதியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் பேரமைப்பு நிர்வாகிகள், கோயம்பேடு அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும், காய்கறி மார்க்கெட் தலைவர் ஜி.டி.ராஜசேகர் பூ மார்க்கெட் நிர்வாகி கோதண்டம், பழ மார்க்கெட் நிர்வாகி என்.பி.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்து, நமது கோரிக்கைகளை ஏற்று, கோயம்பேடு வணிக வளாகத்தை படிப்படியாக திறப்பதாக உறுதியளித்து, முதலில் உணவு தானிய வணிக வளாகத்தை செப்டம்பர் 18 ஆம் தேதியும், மொத்த காய்கறி வணிக வளாகத்தை செப்டம்பர் 28ஆம் தேதியும் திறப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளிட்டுள்ளார்.

மேலும், பூ, பழம் மொத்த வணிக வளாகத்தையும், சில்லரை காய்கறி சிறு மொத்த வணிகத்தையும் அடுத்த கட்டமாக திறப்பதற்கு உறுதி அளித்துள்ளனர். வணிகர்களின் நலன் காக்க எடுத்த முடிவுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும், கோயம்பேடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பும் தமிழக அரசுக்கு கோடானகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் இனிவரும் காலம் பண்டிகை காலமாகவும், பூ, பழம் அறுவடைக்கான பருவ காலமாகவும் இருப்பதை கருத்தில் கொண்டு, 6 மாத காலமாக முடக்கிவைக்கப்பட்ட சில்லரை வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, விரைந்து நடவடிக்கை எடுத்து கடைகள் திறப்பதற்கான தேதியை அறிவித்திடுமாறு கோயம்பேடு அனைத்து வணிகர்களின் சார்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக முதல்வரையும்,  துணை முதல்வரையும், உரிய துறை சார்ந்த அதிகாரிகளையும் மீண்டும் வலியுறுத்துகின்றது.

கோயம்பேடு வணிக வளாக வணிகர்களும் அரசின் வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடித்து, கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும், கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தமிழக அரசோடு துணை நிற்க உறுதி ஏற்க வேண்டும்" 

இவ்வாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.