கொடைக்கானலில் பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் போது, அதனை அப்பகுதி மக்கள் பார்த்தும் பார்க்காதது போல் எந்த சலனமும் இன்றி இயல்பாக நடந்து சென்ற சம்பவம் தமிழகத்தில் மனிதம் மடிந்துவிட்டதா? என்ற மிகப் பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆடலூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான மாலதி என்ற இளம் பெண்ணுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. திருமணம் ஆன அடுத்த சில மாதங்களிலேயே கணவருடன் அவருக்குச் சண்டை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சண்டை வந்துள்ளதால், கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை விட்டு மாலிதி பிரிந்துள்ளார். கணவனைப் பிரிந்த அடுத்த சில மாதங்களில் அவருக்குக் குழந்தையும் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தன் குழந்தையுடன் மாலதி தனியாக வசித்து வந்துள்ளார். 

கணவனைப் பிரிந்த மாலதி, ஆடலூர் கிராமத்தில் இருந்து அருகில் உள்ள கே.சி. பட்டி கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார். அங்கு தன் குழந்தையுடன் அவர் வசித்து வந்துள்ளார். அப்படி தனிமையில் வசிக்கும்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான சதீஷ் என்பவருடன் மாலதிக்கு காதல் மலர்ந்துள்ளது. சதீஷ் - மாலதி இடையேயான காதல் நாளுக்கு நாள் நெருக்கமாகவே, அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து உல்லாசமான ஒரு வாழ்க்கையே வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக, மாலதி தன் காதலன் சதீஷை கணவனாகவே நினைத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி, காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே, ஒரே வீட்டில் ஒன்றாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாலதியின் மகனுக்கு 4 வயது ஆகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், காதலன் சதீஷுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தகவல் மாலதிக்கு நேற்று காலை தான் தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாலதி, நேராக சதீஷ் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு நியாயம் கிடைக்காத நிலையில், காதலன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

அதன் பிறகு, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், அந்த பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து கிளம்பிய அந்த பெண், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். காதலன் வீட்டின் சற்று அருகிலேயே, அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் பட்டப் பகலில், தன் உடலில் பெட்ரோலை ஊற்றி, தீயைப் பற்ற வைத்து உள்ளார். இதில், தீ பற்றி எரிந்த நிலையில், கடும் அலறல் சத்தத்துடன் இங்கும் அங்கமாக ஓடி, அந்த பெண் சாலையில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மாலதி, அழுதுகொண்டே சாலையில் நடந்து வரும்போதும், தன் உடலில் பெட்ரோலை ஊற்றும் போதும், தன் உடலில் தீ வைத்துக்கொண்ட போதும், உடலில் தீ பற்றி எரிந்த நிலையில், கடும் அலறல் சத்தத்துடன் அவர் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருக்கும் போதும், அந்த சாலையில் பொதுமக்கள் பலரும், தீ வைத்து எரிந்துகொண்டிருந்த பெண்ணை காப்பாற்ற மனம் இல்லாமல், இந்த காட்சியைப் பார்த்தும் பார்க்காமல், மனதில் எந்த வித சலனமும் இல்லாமல் இயல்பாகவே நடந்து சென்றுள்ளனர். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இப்படி, ஒரு பெண் தீ குளித்து தற்கொலை செய்துகொள்ளும் போது, அதை வேடிக்கை பார்த்தவர்கள், எந்த வித மனிதத் தன்மையும் இன்றி, இயல்பாகக் கடந்து சென்ற சம்பவம் என்பது, மனிதர்களுக்கே உண்டான மனித மாண்பை குழிதோண்டி பள்ளத்தில் போட்டுப் புதைத்துவிட்டு, அந்த மனிதத் தன்மைக்கு சமாதி கட்டியதையே காட்டுகிறது. 

குறிப்பாக, அங்கே தீ குளித்துச் செத்து மடிந்தது மாலதி என்ற பெண் மட்டும் அல்ல, சாமானிய மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த மனித தன்மையும், அதன் மாண்பும் தான் செத்து மடிந்திருக்கிறது. அதைத் தான், மாலதி தீ குளித்து உயிர் இழந்த வீடியோ காட்சி, இந்த சமூகத்திற்கு உணர்த்துகிறது.

கொடைக்கானல் கிராமங்களுக்கு என்னாச்சு? அங்கே, மனிதன் ஒருவனாவது உயிர் வாழ்கிறானா? இன்னும் கேள்விகள் எழும்..