“மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு ஆதங்கத்தின் காரணமாகவே சில வாசகங்கள் தவறாகப் பயன்படுத்தியதாக” நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல என்று என்று, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கடந்த வாரம் பாஜகவில் இணைந்தார். இது தொடர்பாக நடிகை குஷ்பு விளக்கம் அளித்த போது, “மன நலம் குன்றிய ஒரு கட்சியில் இருந்து விலகி விட்டேன்” என்று, குறிப்பிட்டுப் பேசினார். 

இதன் மூலம் “மாற்றுத்திறனாளிகளை நடிகை குஷ்பு இழிவுபடுத்தி விட்டதாக”, மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தேசிய தளம் என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  

அத்துடன், இது தொடர்பாக நடிகை குஷ்பு மீது தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நடிகை குஷ்புவுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், நடிகை குஷ்புவின் இந்த கருத்துக்குப் பலரும் தொடர்ச்சியாக கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, வேறு வழியின்றி, தன்னுடைய கருத்துக்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கோரினார். 

இது குறித்து அவர் கூறியுள்ள கருத்தில், “அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடினேன். மனச்சோர்வு, இரு முனை கோளாறு போன்றவற்றுடன் வாழும் நண்பர்களைக் கொண்டுள்ளேன். மக்களின் பன்முகத்தன்மையை உணர்ந்தவள் மட்டுமின்றி அதில் இருந்து பெருமளவில் பெற்றும் உள்ளேன்” என்றும் அவர் தெரிவித்து இருந்தார். 

நடிகை குஷ்பு மன்னிப்பு கோரிய அடுத்த நிமிடமே, “நடிகை குஷ்பு சட்டத்தை மீறியிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் சாக்குப்போக்கு எதுவும் கூற வேண்டாம் எனவும்” தொண்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளர் முரளிதரன் தனது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், “நடிகை குஷ்புவின் மன்னிப்பு அபத்தமானது” என்று, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகளின் அழுத்தங்களின் காரணமாகவே மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதற்கு சினிமா கலைஞர் குஷ்பு சுந்தர் மன்னிப்பு கோரியிருக்கிறார் என்றும், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் அமலில் உள்ள போதும் பிரதமர் நரேந்திர மோடி முதல் எச்.ராஜா, குஷ்பு உள்ளிட்ட பாஜக பிரபலங்களும், வேறு சில கட்சித் தலைவர்கள் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகின்றனர்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளனர்.

“ஆதங்கத்தின் காரணமாகவே சில வாசகங்கள் தவறாகச் சொல்லி விட்டதாகக் கூறியிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், மாற்றுத்திறனாளிகளைச் சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசும் மனப்போக்கை அவர் உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றும், அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

குறிப்பாக, “எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை அவதூறு செய்யும் இப்படிப்பட்ட பேச்சுக்கள் பிரபலங்களிடம் இருந்து வரக்கூடாது என்பதற்காகவே இந்த மன்னிப்பை நாங்கள் ஏற்கவில்லை என்றும், இது தொடர்பாக வழக்குகள் நடக்கட்டும், நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லட்டும்” என்றும், அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனால், நடிகை குஷ்புக்கு எதிராகப் பலரும் தற்போது வரை தனது எதிர்மறையான கருத்துக்களைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.