பழனி கோயிலுக்கு வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகளைத் தாக்கி, மனைவியை கடத்தி சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அந்தப் பெண்ணிடம் “என்ன நடந்தது?” என்று விசாரித்து உள்ளனர். 

அப்போது, கடந்த மாதம் 20 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சென்ற போது, “என் கணவரை தாக்கிவிட்டு, என்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்” என்று, கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட மருத்துவர்கள, உடனடியாக அங்குள்ள கண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “பாதிக்கப்பட்ட அந்த 40 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 19 ஆம் தேதி பழனி கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளனர். இதனையடுத்து, மறுநாள் 20 ஆம் தேதி அந்த பெண்ணின் கணவன், உணவு வாங்க சென்று வந்த போது, அங்கு வந்த 3 பேர், அந்த பெண்ணின் கணவனை கடுமையாகத் தாக்கிவிட்டு அந்த பெண்ணை கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அடைத்து வைத்து, பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  

இந்த கூட்டுப் பாலியல் பலாத்காரத்தைச் செய்ததில், அந்த தனியார் விடுதியின் மேலாளரும் ஒருவராக இருந்துள்ளார். 

குறிப்பாக, “கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண், மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவரது மர்ம உறுப்பில் பீர் பாட்டில்கள் கொண்டு தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண் சார்பில், அவரது கணவன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றபோது, போலீசார் இந்த புகார் மனுவை வாங்க மறுத்து, அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கேரள மாநிலம் கண்ணூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் புகார் அளித்து உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கேரள போலீசார், பழனி காவல் துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, “கேரள பெண் பழனிக்கு வந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், அந்த பெண் கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

“இந்த வழக்குத் தொடர்பாக பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும்,  சிசிடிவி காட்சிகள், தொலைபேசி உரையாடல்கள், சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த தற்போது 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், இது தொடர்பான வழக்கில் கேரள 
காவல் துறையினருடன் இணைந்து முழு விசாரணை செய்வோம்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.