பாஸ்போர்ட் வைப்பதற்கான கவர் ஒன்றை ஆன்லைனில்  ஆர்டர் செய்திருந்த இளைஞருக்கு, உண்மையான பாஸ்போர்ட்டுடன் கவரை அளித்து, அமேசான் நிறுவனம் அதிர்ச்சி அளித்திருக்கிறது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான மிதுன் பாபு. இவர்,  தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக பாஸ்போர்ட் கவர் ஒன்றை ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். 
 
கடந்த 30-ம் தேதி மிதுன் பாபு, ஆன்லைனில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு, ஒரு பார்சல் வந்துள்ளது. தான் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவர் தான் வந்துள்ளது என்று கருதிய மிதுன் பாபு, அந்த கவரை மிகவும் ஆசையாக பிரித்து பார்த்துள்ளார். 

ஆனால், கவரை பிரித்த மிதுன் பாபுக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட கவரில் பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக, ஒரு பாஸ்போர்ட்டுடன் இருந்துள்ளது பாஸ்போர்ட் கவர்.  ஒரு வேளை டம்மி பாஸ்போர்ட்டை வைத்து அனுப்பி இருப்பார்களோ என நினைத்தார் மிதுன் பாபு. ஆனால் அதனை முழுமையாக பிரித்து பார்த்தபோது, உண்மையான பாஸ்போர்ட் இருந்துள்ளது. 

P1

இந்திய அரசால்  விநியோகிக்கப்படும் பாஸ்போர்ட், அமேசானில், தான் செய்த ஆர்டரில் எப்படி வந்தது என்பது தெரியாமல் மிதுன் பாபு குழப்பமடைந்துள்ளார். அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த மிதுன் பாபு, அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீஹ் என்பவருடையது என்பதை கண்டுப்பிடித்தார். 

இதையடுத்து உடனடியாக அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு, கொண்டு மிதுன் பாபு பதட்டத்தோடு பாஸ்போர்ட் கவர் குறித்து தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு அவருக்கு சரியான பதில் தெரிவிக்கப்படவில்லை. ‘உங்களுக்கு நேர்ந்தது போல மீண்டும் ஒரு முறை நடக்காது. இது தொடர்பாக விற்பனையாளரிடம் தெரியப்படுத்தி கவனமாக இருக்குமாறு கூறிவிடுவதாக சொல்லிவிட்டு வைத்துள்ளனர்’அமேசான் வாடிக்கையாளர் சேவைப் பிரிவினர். 

அந்த நிஜ பாஸ்போர்ட்டை என்ன செய்வது என பொறுப்பான பதிலையும் அவர்கள், மிதுன் பாபுவிடம் கூறவில்லை. ஆனால், மிதுன் பாபு, அமேசானை போல அப்படியே விட்டுவிடவில்லை. உரியவரிடம் பாஸ்போர்ட்டை சேர்க்க வேண்டும் என்று மிதுன் பாபு எண்ணினார். 
இதனைத் தொடர்ந்து பாஸ்போர்ட்டில் மொபைல் எண்ணும் இல்லாததால், மிதுன் பாபுவால் முகமது சலீஹை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

பின்னர் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருந்த முகவரியை தொடர்பு கொண்ட மிதுன் பாபு, பாஸ்போர்ட் விவகாரம் குறித்து கூறியுள்ளார். அப்போது தான் அந்த பாஸ்போர்ட் முகமது சலீஹ்-ன் உண்மையான பாஸ்போர்ட் என்பது மிதுன் பாபுக்கு தெரியவந்தது. இதுபற்றி மிதுன் பாபு கூறும்போது, ’முகமது சலீஹும் என்னைப் போலவே, பாஸ்போர்ட் கவருக்கு ஆர்டர் செய்திருந்தார். 

P2

வாங்கிப் பார்த்து அதில் பாஸ்போர்ட்டை வைத்துப் பார்த்தார். அது அவருக்கு திருப்தியாக இல்லை. இதனால், அப்படியே அமேசானுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். உள்ளே வைத்த பாஸ்போர்ட்டை முகமது சலீஹ் திருப்பி எடுக்க மறந்துவிட்டார். ஆனால், அதை சரிபார்க்காத அமேசான் ஊழியர்கள், நான் கேட்டதும் திரும்பி வந்த அந்த கவரை, அப்படியே எனக்கு பார்சல் செய்து அனுப்பிவிட்டனர். 

உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட பார்க்காமல் அனுப்பிய அமேசான் ஊழியர்களின் செயல் அதிர்ச்சியாக இருக்கிறது. அதோடு அடுத்து என்ன செய்யலாம் என்பதை கூட சரியாக சொல்லாமல் பொறுப்பில்லாமல் சேவை மைய ஊழியர்கள் நடந்துகொண்டது ஆச்சரியமாக இருந்தது’என்றார். கடந்த மாதம் எர்ணாகுளம் அருகிலுள்ள ஆலுவா பகுதியில் இருந்து ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு பாத்திரம் கழுவும் ஒரு சோப்பும், 5 ரூபாயையும் அனுப்பியிருந்தது அமேசான் என்பது குறிப்பிடத்தக்கது.  

சில நாட்களாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது, ஐஃபோனுக்கு பதிலாக, பொருட்கள் மாற்றி வருவதால், ஆன்லைன் ஆர்டர் செய்யும்போது, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொள்வது மிகவும் வசதியானது என்று வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில், அப்போதுதான் பொருட்கள் மாறி வந்தால் உடனடியாக நாம் ஆர்டர் செய்த பொருட்களை உரிய முறையில், பெற முடியும் என வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.