காரைக்காலில் மதுபான உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் தாதாவை, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த வெங்கடேசப் பெருமாள், காரைக்கால் சர்ச் வீதியில் செயல்பட்டு வரும் மதுபானங்களை மொத்த விற்பனைக்கு விற்று வருகிறார்.

இதனிடையே, வெங்கடேசப் பெருமாளுக்கு சொந்தமான கடையை, நாகராஜ் என்பவர் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வெங்கடேசப் பெருமாள் - நாகராஜ் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. கடந்த பல வருடங்களாக இருவருக்குள்ளும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இருவருக்கும் இடையே, கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை எழுந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை குறித்து, நாகராஜ் அந்த பகுதியில் உள்ள பெண் தாதா எழிலரசியிடம் கூறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக நாகராஜுக்கு ஆதரவாகக் காரைக்கால் பெண் தாதா எழிலரசி, அவரது கூட்டாளிகள் திரிலோக சந்திரன், பாலமுருகன் உள்ளிட்டோர் சேர்ந்து, வெங்கடேசப் பெருமாளை அழைத்து பஞ்சாயத்துப் பேசி உள்ளனர்.

அந்த கட்ட பஞ்சாயத்தில், நாகராஜ் கேட்கும் பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என்று, வெங்கடேசப் பெருமாளை அவர்கள் மிரட்டியதாகத் தெரிகிறது. அத்துடன், பணத்தைத் தர மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும், அவர்கள் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த வெங்கடேசப் பெருமாள், கொலை மிரட்டல் தொடர்பாகக் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீர வல்லபனிடம் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வெங்கடேசப் பெருமாளை மிரட்டியதாக நாகராஜ், பெண் தாதாவின் கூட்டாளிகளான திரிலோக சந்திரன், பாலமுருகன் ஆகியோரை அடுத்தடுத்து அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பெண் தாதா எழிலரசி, தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து, அவரை தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

பெண் தாதா எழிலரசி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த உடன், தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், அவர் தற்போது தலைமறைவாகி உள்ளார். 

அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் தாதா எழிலரசியின் கூட்டாளிகளிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மதுபான உரிமையாளருக்குப் பெண் தாதா ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், காரைக்காலில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், புதுச்சேரியில் கடந்த கடந்த வாரம் முரடர்களால்  2 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்பும், புதுச்சேரியில் ரவுடிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து காணபட்ட நிலையில், தற்போது புதிதாகப் பெண் தாதா ஒருவர் புதிதாகத் தாதா அவதாரம் எடுத்துள்ளது புதுச்சேரியில் பெரிய
அளவில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் ரவுடிகளின் அட்டகாசத்தை முற்றிலுமாக போலீசார் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், புதுச்சேரி மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.