கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு முக்கியமாக டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதற்கிடையில் கடந்த 9-ம் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, சென்னை அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. 

k1

இதனால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், வரும் 13-ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இன்றும், நாளையும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 

இதன் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: 

''வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.

k2

கன்னியாகுமரியில் நேற்று அதிதீவிரமான கனமழை பெய்ததால் மாவட்டமே சின்னாபின்னமானது. மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 செ.மீ, 15 செ.மீ என அதிக அளவு மழை பதிவானது. இதனால் மாவட்டத்தின் அனைத்து குளங்களிலும் அதிகப்படியான் வெள்ளம் மறுகால் பாய்ந்து செல்கிறது.

வேம்பனூர், புத்தேரி, மேற்கு நெய்யூர் உள்ளிட்ட பெரிய குளங்களின் கரை உடைந்ததால் வயல் வெளிகளிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்தன. பத்திற்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டன. அருகில் உள்ள இடங்களுக்குச் செல்லவும் பல கிலோமீட்ட தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

தோப்பூர் ஜங்சனில் வெள்ளம் பெருகியதால் ராஜாக்கமங்கலம், ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனை இருக்கும் கோட்டையைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

ரயில் தண்டவாளங்களில் மழைநீர் நிரம்பி காணப்படுவதால், கன்னியாகுமரி, நெல்லை, நாகர்கோவில் ரயில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

சாலை, ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அடுத்த 2 நாட்கள் கனமழை எச்சரிக்கையால், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களை பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லும்படி வலியுறுத்தி வருகின்றனர்.