தன்னுடன் கள்ளத் தொடர்பில் இருந்த கொழுந்தனை, ஒன்றரைக் கோடி ரூபாய் சொத்துக்காக அண்ணியே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான கொஞ்சி அடைக்கன், இவரது மனைவி 33 வயதான பழனியம்மாள் தம்பதிக்கு மூன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 

இப்படியான நிலையில், கொஞ்சி அடைக்கன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி, அந்த பகுதியிலேயே குடும்பத்துடன் தங்கியிருந்தார். அப்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வேலைக்கு சென்றவ அவர், இரவு வீடு திரும்பவில்லை. 

கணவன் திடீரென்று மாயமானது குறித்து அவரது மனைவி பழனியம்மாள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், வழக்கை கிடப்பில் போட்டதாகத் தெரிகிறது.

இப்படியாகக் காலங்கள் உருண்டோடிய நிலையில். கொஞ்சி அடைக்கனுக்கும், அவரது பெரியப்பா மகன் அண்ணனின் மனைவியான சித்ராவுக்கும் இடையே கள்ளக் காதல் இருந்ததாக போலீசாருக்கு தற்போத தகவல் கிடைத்தது. 

இது தொடர்பாக போலீசார் சித்ராவிடம் தங்களது பாணியில் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, கொலை செய்யப்பட்ட கொஞ்சி அடைக்கனுக்கு, ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகர் பகுதியில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இருக்கிறது. கொஞ்சி அடைக்கனின் பெரியப்பா மகன் அண்ணனும், அவரது மனைவியும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு முன்பு கொஞ்சி அடைக்கனும் அவர்களுடன் வசித்து வந்தார். 

அப்போது, அண்ணி சித்ராவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியதாகத் தெரிகிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டு வந்தனர். 

ஆனால், அதன் பிறகு சித்ராவிற்கு வேறொரு நபருடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விசயத்தைத் தெரிந்துகொண்டு கடும் கோபமடைந்த கொஞ்சி அடைக்கன், காஞ்சிபுரத்தில் குடியேறி, பழனியம்மாளை திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

அந்த தருணத்தில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் வீட்டை விற்பதற்காக, அங்கு தங்கியிருந்த அவரது அண்ணி சித்ராவை காலி செய்யும் படியும், அவரிடம் கொடுத்த பணத்தைக் கேட்டும் கொஞ்சி அடைக்கன், சில நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த வீட்டை அபகரிக்க நினைத்த சித்ரா, அந்த வீட்டை காலி செய்யவே முடியாது என்று மறுத்ததோடு, கொஞ்சி அடைக்கனை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்திருக்கிறார்.

அத்துடன், நன்றாகத் திட்டமிட்டு தனக்குத் தெரிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வேலைக்கு சென்ற கொஞ்சி அடைக்கனை, அவரது அண்ணி சித்ரா தொடர்பு கொண்டு, வீடு விசயமாகப் பேச வேண்டும் என்று கூறி தனியாக வரவழைத்து, அவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

குறிப்பாக, கொலை செய்யப்பட்ட அவரின் கை, கால்களைக் கட்டி, ஒரு இரும்பு டிரம்மில் அடைத்து வைத்து அதன் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டி மூடி உள்ளனர். 

அதன் பிறகு, சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டு கிராமத்திலுள்ள சுதர்சன் ரெட்டி என்பவரது கிணற்றில் டிரம்மை வீசி விட்டுத் தப்பியுள்ளனர். கொஞ்சி அடைக்கனை கொலை செய்ய கூலிப்படைக்கு சித்ரா 5 லட்சம் ரூபாய் கொடுத்து, இந்த கொலையை அவர் நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் தற்போது கைது செய்துள்ள நிலையில், மலைப்பட்டு கிராமத்திற்குக் குற்றவாளிகளை அழைத்துச் சென்று சடலம் வீசப்பட்ட கிணற்றை அடையாளம் கண்டு, கிணற்றிலிருந்து இரும்பு டிரம் மீட்கப்பட்டு, அதை உடைத்துப் பார்த்தபோது கொஞ்சி அடைக்கனின் எலும்புகள் மட்டும் கிடந்திருக்கின்றன. 

அவற்றைச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சித்ரா, ஏழுமலை, ரஞ்சித், டார்ஜான்குமார், விவேக் என்கிற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்ரமணியன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிக்க நினைத்து, தன்னுடன் கள்ளத் தொடர்பில் இருந்த கொழுந்தனை அண்ணியே, ஆள் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.