கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ தனது இல்லத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். அவருக்கு அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும்( 34), தியாகத்துருவம் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் மகள் சௌந்தர்யாவும்( 20) கடந்த இரண்டு வருடமாக ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில், இன்று (அக்டோபர் 5) காலை 5.30 மணிக்கு, எம்.எல்.ஏ பிரபு, தனது இல்லத்தில் உறவினர்கள் நண்பர்கள் ஆசியோடு திருமணம் செய்துகொண்டார்.

முன்னதாக, பிரபு எம்.எல்.ஏ பெண்ணை கடத்திவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தோம். ஒரு சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர், படித்தவர் அப்படி செய்வாரா என்று கேள்வி எழுப்பியவர்கள், பெண் வீட்டார் ஒப்புதலுடன்தான் சௌந்தர்யாவைத் திருமணம் செய்துகொண்டார் என்று தெரிவித்தனர்.

பொண்ணுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு வரதட்சணை பெற்றுக்கொண்டு திருமணம் செய்துகொள்ளும் இந்த காலத்தில் எம்.எல்.ஏ.வான பிரபு வரதட்சணை இல்லாமல் புரட்சிகரமான திருமணத்தை செய்துள்ளதைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டனர்.

பிரபு, திருமணம் செய்துகொண்ட தகவல்கள் அறிந்த சக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மாற்றுக் கட்சி பிரமுகர்களும், எம்.எல்.ஏ பிரபுவுக்கு திருமண வாழ்த்துகள் தெரியபடுத்தி வருகிறார்கள். 

திருமணம் தொடர்பாக பிரபு தனது முகநூல் பக்கத்தில், “எல்லாம் வல்ல அண்ணாமலையார், மலையாம்பிகை அம்மன் அருளாசியுடன் எங்கள் பெற்றோர்முன்னிலையில் நான் காதலித்த பெண்ணையே இன்று #திருமணம் செய்துகொண்டேன். கொரோனா காலகட்டம் என்பதால் நண்பர்கள் நலம்விரும்பிகள் கழக நிர்வாகிகள் என உங்கள் அனைவரையும் அழைக்க முடியா சூழல்.. இன்று போல் என்றும் உங்கள் அன்பில் நான்” என்று பதிவிட்டு திருமண புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்தத் திருமணத்தில் பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்ததாக தெரியவில்லை. பெண்ணின் தந்தை பிரச்னை செய்ததாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் அவர்களிடம், அங்குள்ளவர்கள் சமாதானம் பேசி உள்ளனர். இதற்குள் மணமகளை பிரபு எம்.எல்.ஏ. கடத்தி சென்றுவிட்டதாக பரபரப்பு செய்தி பரவியது. `பொதுவாக காதல் திருமணம் செய்வது சாதாரண எளிய மனிதர்கள் முதல் மிகப்பெரிய வி.ஐ.பி வரை நடப்பதுதான். இதில் பிரபு எம்.எல்.ஏ.வின் காதல் திருமணத்தை பரபரப்பாக்கி, பெரிதுபடுத்துவது ஏன்? அரசியல்வாதி என்றால் காதலிக்கக்கூடாதா, காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடாதா?' என்று கேள்வி எழுப்புகிறார்கள் எம்.எல்.ஏ பிரபுவின் ஆதரவாளர்கள். மணமகள் சௌந்தர்யாவின் முழு சம்மதத்தின் பேரில் நடைபெற்றுள்ள இந்த சாதி மறுப்பு திருமணத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.