மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்டு காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர பணியிடங்களையும் வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :

``தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணிகளில் காலியிடங்கள் அதிகம் உள்ளன. இதனால் குறைந்த அளவு ஊழியர்களை வைத்துக் கொண்டு நுகர்வோர்களுக்கு திருப்தியான முறையில் சேவை செய்ய முடியவில்லை. இருக்கின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் ஏற்பட்டது. எனவே, களப்பணியிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டுமென கோரி மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. இதன் விளைவாக மின்சார வாரியம் 10,000 கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்தது. அதற்காக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உடற் தகுதி தேர்வும் மற்றும் எழுத்துத்தேர்வும் நடத்தி, 15,000 பேர் தேர்ச்சி பெற்றதாக மே மாதம் அறிவித்தது. தேர்ச்சி வரிசை பட்டியலையும் வெளியிட்டது. அதன்படி கேங் மென் பணியாளர்களை பணியமர்த்த மின்சார வாரியம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக அரசின் இப்போக்கு ஏற்கக்கூடியதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பீல்ட் அசிஸ்டென்ட், அசசர், ஜூனியர் அசிஸ்டென்ட் என்ற ஆரம்பநிலை பணிகளில் சுமார் 52,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதனால் மின் நுகர்வோர் சேவை செய்வதில் காலதாமதம் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகள் ஏற்படுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உருவாகிறது. இந்நிலையில் தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ள பத்தாயிரம் கேங்மென் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குவதில் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல. இந்த கால தாமதத்தின் மூலம் பணி நியமனத்தில் தவறுகள் நடக்குமோ என்ற அச்சமும் தேர்வு எழுதியுள்ளவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கேங்மென் பதவிகளை உடல்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டுமெனவும், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மின் வாரிய தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தி உள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆகவே, மின்வாரியத்தில் பத்தாயிரம் கேங்மேன் பணியிடங்களையும், காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர பணியிடங்களையும் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வழங்கி, காலியுள்ள இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது"